ஒடிசாவில் ‘பானி’ புயல் தாக்குதல்: நிறுவனங்களில் தேங்கி கிடக்கும் பின்னலாடைகள் அனுப்ப முடியாமல் வியாபாரிகள் தவிப்பு
ஒடிசாவில் ‘பானி’ புயல் தாக்குதல் காரணமாக அங்கு ஆடைகளை அனுப்ப முடியாமல் வியாபாரிகள் தவித்து வருகிறார்கள். இதனால் தயாரித்து வைக்கப்பட்ட பின்னலாடைகள் நிறுவனங்களில் தேங்கிக்கிடக்கின்றன.
திருப்பூர்,
ஆடை தயாரிப்புக்கு பெயர் பெற்றது திருப்பூர். இங்கு தயாரிக்கப்படும் ஆடைகளை பலரும் விரும்பி வாங்கி அணிகிறார்கள். திருப்பூரின் பிரதான தொழிலாக பின்னலாடை தொழில் இருந்து வருகிறது. பலரும் இந்த தொழிலை தேர்வு செய்து செய்து வருகிறார்கள். இதன் காரணமாக திரும்பும் திசையெங்கும் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்களை காண முடியும்.
திருப்பூருக்கும் தினமும் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டம் என பல்வேறு பகுதிகளில் இருந்தும் வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகள் என பலர் வருவார்கள்.
இங்குள்ள பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் காதர்பேட்டையில் உள்ள கடை போன்றவைகளில் ஆடைகளை பார்வையிட்டு, தங்களுக்கு தேவையான ஆர்டர்களை கொடுத்து செல்வார்கள். இதனால் திருப்பூரில் இருந்து தினமும் பல பகுதிகளுக்கு ஆடைகள் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒடிசாவில் ‘பானி’புயல் தாக்கியுள்ளதால் அங்கு பின்னலாடைகளை அனுப்ப முடியாமல் உள்நாட்டு ஆடை வியாபாரிகள் தவித்து வருகிறார்கள். இதன் காரணமாக நிறுவனங்களில் பின்னலாடை தேங்கிக்கிடக்கின்றன.
இது குறித்து உள்நாட்டு ஆடை வியாபாரிகள் கூறியதாவது:–
‘பானி’ புயல் ஒடிசா மாநிலத்தில் நேற்று காலை கரையை கடந்தது. அப்போது ஒடிசா மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் சூறைக்காற்றுடன், பலத்த மழையும் பெய்தது. இதில் மின்கம்பங்கள், மரங்கள் பல முறிந்து சாலையில் விழுந்தன. ‘பானி’புயல் உருவானதில் இருந்து கரையை கடக்கும் இடம் வரை வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்திருந்தது. அதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் ஒடிசா மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டது.
ஒடிசா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் கொடுத்த ஆர்டர்களின் பேரில் ஆடைகளை தயார் செய்துவைத்திருந்தோம். ஆடைகளை அனுப்ப முடியாத நிலை கடந்த 3 நாட்களாக இருந்தது. தற்போது அங்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. ரெயில் மற்றும் விமான சேவை போன்றவை ரத்து செய்யப்பட்டிருந்தது.
ஆர்டர்கள் கொடுத்தவர்கள் இனி ஆடைகளை வாங்க காலதாமதம் செய்வார்கள். இதனால் ஆடைகளை அனுப்ப முடியாமல் தவித்து வருகிறோம். பின்னலாடைகளும் நிறுவனங்களில் தேங்கிக்கிடக்கின்றன. ஒடிசா மாநிலத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்புவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும். அதன் பின்னரே அங்கு ஆடைகளை விற்பனைக்கு அனுப்பிவைக்க முடியும்.
திருப்பூர் பின்னலாடை வர்த்தகம் திருப்பூரை மட்டுமே சார்ந்து இல்லை. திருப்பூரில் சூழல் நன்றாக இருந்தாலும், வர்த்தகம் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த மாநிலங்களில் இதுபோன்று இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டாலும், திருப்பூர் பின்னலாடை வர்த்தகம் பாதிக்கப்படுகிறது. திருப்பூர் வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.