சங்கராபுரம் அருகே, வாகன சோதனையில் ரூ.18¼ லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை


சங்கராபுரம் அருகே, வாகன சோதனையில் ரூ.18¼ லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 4 May 2019 4:30 AM IST (Updated: 4 May 2019 5:30 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே வாகன சோதனையில் ரூ.18¼ லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

சங்கராபுரம்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 18-ந்தேதி நடைபெற்றது. ஆனாலும் வாக்கு எண்ணிக்கை நாளான வருகிற 23-ந்தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ரிஷிவந்தியம் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி வெங்கடசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மாடாம்பூண்டி கூட்டுரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தபோது, அதில் ரூ.18 லட்சத்து 46 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் மாணிக்கவள்ளி கிராமத்தை சேர்ந்த சுந்தரம் மகன் சிவஞானம் என்பதும் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்த ரூ.18 லட்சத்து 46 ஆயிரத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை எடுத்து சென்றதும், அதற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் இருந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரகுபதியிடம் ஒப்படைத்தனர். அப்போது தாசில்தார் பாண்டியன், தனி தாசில்தார் வாசுதேவன், தேர்தல் துணை தாசில்தார் வைரகண்ணன், முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் தினேஷ், செங்குட்டுவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story