விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பெண்ணிடம் பணம் திருட்டு போலீஸ் விசாரணை

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பெண்ணிடம் வெள்ளி கொலுசு, பணத்தை மர்ம நபர் திருடி சென்றுவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலத்தை சேர்ந்தவர் சதீஷ்(வயது 30). கூலி தொழிலாளி. இவரது மனைவி புஷ்பவள்ளி(25). இவர்களது மகன் அருள்முருகனுக்கு(2) உடல்நலம் சரியில்லாமல் போனதால், கடந்த 2-ந்தேதி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்ற அருள்முருகனுடன் புஷ்பவள்ளி உடனிருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவரும் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 12.30 மணியளவில் புஷ்பவள்ளி எழுந்து பார்த்த போது அவர் வைத்திருந்த பையை காணவில்லை. அதில் 10 ஆயிரம் ரூபாய், ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி கொலுசுகள் மற்றும் ஒரு செல்போன் ஆகியன இருந்தது. இதை மர்ம மனிதர்கள் திருடி சென்றுவிட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவமனைக்குள் புகுந்து திருடிய மர்ம நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகள் மூலமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Related Tags :
Next Story






