எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணை பொதுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்


எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணை பொதுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 5 May 2019 3:45 AM IST (Updated: 5 May 2019 2:05 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்விற்கு விண்ணப்பித்து வருகை புரியாத, தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகளுக்காக அடுத்த மாதம் (ஜூன்) 14-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை சிறப்பு துணை பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற 10-ம் வகுப்பு எனப்படும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்விற்கு விண்ணப்பித்து வருகை புரியாத, தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகளுக்காக அடுத்த மாதம் (ஜூன்) 14-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை சிறப்பு துணை பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது. அந்த தேர்வினை எழுதும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று நாளை (திங்கட்கிழமை) மதியம் முதல் வருகிற 10-ந்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணம் ரூ.125 மற்றும் ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.50 சேர்த்து மொத்த கட்டணம் ரூ.175-ஐ ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பள்ளிகள், தேர்வு மையங்களிலேயே பணமாக மட்டுமே செலுத்த வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்து கொள்ளலாம். தேர்வர்களுக்கு தேர்வெழுத தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது. தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு மையம் குறித்து தெரிவிக்கப்படும் . இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 

Next Story