சிவன்மலை கோவிலில் பாதுகாப்பு குறித்து சென்னை அதிகாரி ஆய்வு கோவில் இணை ஆணையர் புறக்கணித்தார்


சிவன்மலை கோவிலில் பாதுகாப்பு குறித்து சென்னை அதிகாரி ஆய்வு கோவில் இணை ஆணையர் புறக்கணித்தார்
x
தினத்தந்தி 6 May 2019 3:48 AM IST (Updated: 6 May 2019 3:48 AM IST)
t-max-icont-min-icon

சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் பாதுகாப்பு குறித்து சென்னை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது கோவில் இணை ஆணையர் வர மறுத்து புறக்கணித்தார்.

காங்கேயம்,

சமீபத்தில் இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து தமிழகத்தில் கோவில்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி நேற்று சென்னையில் இருந்து பாதுகாப்பு தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.சேகர் காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு வந்தார். அங்கு காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம் தலைமையில் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, உணவு பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் கோவில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான கண்ணதாசன் வருகைக்காக நீண்ட நேரம் அதிகாரிகள் காத்திருந்தனர். ஆனால் அவர் வரவில்லை. இதனைத்தொடர்ந்து சிறிது நேரத்திற்கு பின்னர் கூட்டத்தை ஆரம்பித்தனர். சென்னையில் இருந்து வந்திருந்த பாதுகாப்பு தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் இதில் கலந்து கொண்டு பல்வேறு துறையின் சார்பில் கோவில் பாதுகாப்பு குறித்து விவரங்களை கேட்டறிந்தார்.

அதன் பின்னர் கோவிலை அதிகாரிகள் சுற்றி பார்த்து ஆய்வு செய்தனர். குறிப்பாக கோவில் வளாகத்தில் உள்ள தீயணைப்பு சாதனங்கள் பற்றி கேட்டு அறிந்தார். இந்த சாதனங்களை இங்கு இயக்குவது யார்? என்று கேட்டார். ஆனால் பணியாளர்கள் யாரும் இதுபற்றி சரியாக பதில் சொல்லவில்லை. அதன் பின்னர், கோவிலில் உள்ள அலாரம் இயக்கப்படும் அறை, பொது உண்டியல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இடங்களையும் பார்த்து ஆய்வு செய்தார்.

தொடர்ந்து மலைக்கோவில் வளாகத்தில் முறுக்கு, சீடை,லட்டு போன்றவை விற்பனை செய்பவரிடம் விசாரணை நடத்தினார். இந்த உணவு பொருட்கள் அனைத்தும் அதன் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி எதுவும் இல்லை. கண்டிப்பாக இந்த பொட்டலங்களில் தேதி குறிப்பிடப்படவேண்டும். இந்த உணவு பொருட்கள் விற்பனைக்கு கோவிலுக்கு கொண்டு வரும்போது. இதில் தின்பண்ட பாக்கெட்டில் ஒன்றினை கோவில் அலுவலகத்தில் கொடுத்து அனுமதி பெற்று விட்டுதான், மேலே விற்பனைக்கு கொண்டு வரவேண்டும் என அறிவுறுத்தினார்.

ஆய்வுக்கு பின்னர் பாதுகாப்பு தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சேகர் கூறுகையில் ‘‘இந்த கோவிலில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதுபற்றிய அறிக்கை சம்பந்தப்பட்ட மேல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்படும். மேலும் இந்த கோவிலின் இணை ஆணையருக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அவர் ஆய்வுக்கு வர மறுத்து புறக்கணித்து விட்டார். இதனால் இந்த கோவிலின் மற்ற பணியாளர்களிடம் பாதுகாப்பு குறித்து விவரங்கள் கேட்டறிந்தோம். இணை ஆணையர் வர மறுத்தது குறித்து சம்பந்தப்பட்ட மேல் அதிகாரிகளுக்கு புகார் செய்துள்ளேன்’’ என்று கூறினார்.


Next Story