திருப்பூர் பழைய பஸ்நிலையத்தில் அரசு பஸ் நடத்துனர் மீது தாக்குதல் போதை வாலிபர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்


திருப்பூர் பழைய பஸ்நிலையத்தில் அரசு பஸ் நடத்துனர் மீது தாக்குதல் போதை வாலிபர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 6 May 2019 4:45 AM IST (Updated: 6 May 2019 3:53 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் பழைய பஸ்நிலையத்தில் அரசு பஸ் நடத்துனரை தாக்கிய போதை வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் பழைய பஸ்நிலையத்தில் இருந்து திருப்பூர் மாநகர் மட்டுமின்றி புறநகர் பகுதிகளுக்கும், கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களு ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் ஈரோட்டில் இருந்து திருப்பூருக்கு அரசு பஸ் ஒன்று வந்தது. பஸ்சை டிரைவர் தங்கவேல் ஓட்டி வந்தார். நடத்துனராக ராமசாமி என்பவர் இருந்தார். இந்த பஸ் பழைய பஸ்நிலையத்திற்குள் நுழைந்த போது, மதுபோதையில் இருந்த 2 வாலிபர்கள் திடீரென பஸ்சில் குறுக்கே சென்றுள்ளனர். அவர்கள் மீது மோதாமல் இருக்க டிரைவர் உடனடியாக பிரேக் பிடித்துள்ளார்.

பின்னர் அந்த 2 வாலிபர்களிடமும் இதுகுறித்து டிரைவர் மற்றும் நடத்துனர் கேட்டுள்ளனர். இதனால் கோபம் அடைந்த அந்த போதை வாலிபர்கள் பஸ்சில் ஏறி நடத்துனரை தாக்கியுள்ளனர். மேலும், அவரை பஸ்சில் இருந்து வெளியே இழுத்து வந்து அடித்து, உதைத்துள்ளனர். இதில் நடத்துனர் ராமசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்த பஸ் பயணிகள் மற்றும் பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் ஏராளமானோர் அங்கு கூடினார்கள். பின்னர் உண்மை நிலையை தெரிந்து கொண்ட அவர்கள், அந்த போதை வாலிபர்களை மடக்கி பிடித்து அவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் காயமடைந்த நடத்துனரை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அந்த போதை வாலிபர்களை பொதுமக்களிடம் இருந்து மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதற்கிடையே, அந்த வாலிபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, பஸ்நிலையத்தின் உள்ளே இருந்த புறக்காவல் நிலையத்தை போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் முற்றுகையிட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். போதை வாலிபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வரும் ரவி(வயது 24) மற்றும் அவருடைய நண்பர் சூர்யா(26) என்பது தெரியவந்தது. இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ்நிலையத்தில் வைத்து அரசு போக்குவரத்து ஊழியர்கள் மீது போதை வாலிபர்கள் தாக்குதல் நடத்தியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story