அ.தி.மு.க. ஒரு பொருட்டே இல்லை: அ.ம.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் இடையே தான் போட்டி - தங்க தமிழ்ச்செல்வன்


அ.தி.மு.க. ஒரு பொருட்டே இல்லை: அ.ம.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் இடையே தான் போட்டி - தங்க தமிழ்ச்செல்வன்
x
தினத்தந்தி 6 May 2019 4:45 AM IST (Updated: 6 May 2019 4:44 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் இடையே தான் போட்டி என்றும், அ.தி.மு.க. ஒரு பொருட்டே இல்லை என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் பிரசாரம் செய்தார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் அ.ம.மு.க. வெற்றிபெறும். இதே கருத்தை தான் தொடர்ந்து கட்சி பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் சொல்லி வருகிறார். அதுதான் நடக்கப் போகிறது. இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை அ.ம.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் இடையே தான் போட்டி. அ.தி.மு.க. ஒரு பொருட்டே இல்லை. 3 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செய்வது என்பது சபாநாயகரின் அவசரமான நடவடிக்கை. இது அ.தி.மு.க.வின் தேர்தல் தோல்வி பயத்தை காட்டுகிறது.

அ.தி.மு.க. ஓட்டுகளை அ.ம.மு.க. பிரிக்கிறது என்று சொல்வது தவறு. அ.ம.மு.க.வில் தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் உள்ளனர். இதனால் அ.ம.மு.க.வுக்கு தான் மக்கள் ஓட்டு போடுவார்கள். தி.மு.க.வை மக்கள் விரும்பவில்லை. எனவே திருப்பரங்குன்றம் தொகுதியில் எங்கள் வெற்றி உறுதியாகிவிட்டது.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தபோது, குடிநீர் தட்டுப்பாடு, 100 நாள் வேலை திட்டத்தில் மக்கள் உழைப்பு சுரண்டல், கியாஸ் சிலிண்டர்கள் விலை உயர்வு, கேபிள் டி.வி. கட்டணம் அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை தான் பா.ஜ.க., அ.தி.மு.க. அரசுகளின் சாதனை. எனவே தான் மக்கள் அ.ம.மு.க.வுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story