செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் - கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை


செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் - கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 6 May 2019 3:30 AM IST (Updated: 6 May 2019 5:13 AM IST)
t-max-icont-min-icon

தெங்கம்புதூர் அருகே செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மேலகிருஷ்ணன்புதூர்,

குமரி மாவட்டம் தெங்கம்புதூர் அருகே கீழக்காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவருடைய மனைவி பால்கனி.

இவர்களுக்கு 2 மகன்களும், சந்தியா (வயது18) என்ற மகளும் உண்டு. சந்தியா கன்னியாகுமரி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் வீட்டில் இருக்கும் செல்போனில் விளையாடுவதாக கூறப்படுகிறது. இதனை, அவரது பெற்றோர் கண்டித்து வந்தனர்.

சம்பவத்தன்று சந்தியாவிடம் வீட்டு வேலைகளை செய்யும்படி அவரது தாயார் கூறினார். அதற்கு சந்தியா மறுப்பு தெரிவித்து செல்போனில் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தாயார் பால்கனி அவரை கண்டித்தார். இதனால், மனமுடைந்த சந்தியா வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதைகண்ட உறவினர்கள் அவரை மீட்டு நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்தியா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பிரசாத்குமார் மற்றும் போலீசார், சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story