கூடலூர் அருகே, காரை சேதப்படுத்திய காட்டுயானை


கூடலூர் அருகே, காரை சேதப்படுத்திய காட்டுயானை
x
தினத்தந்தி 5 May 2019 10:00 PM GMT (Updated: 6 May 2019 12:23 AM GMT)

கூடலூர் அருகே காட்டுயானை காரை சேதப்படுத்தியது.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பாண்டியாறு அரசு தேயிலை தோட்ட பகுதியில் கடந்த சில வாரங்களாக காட்டுயானைகள் கூட்டமாக முகாமிட்டு உள்ளன. இதனால் தோட்ட தொழிலாளர்கள் பீதியுடன் பச்சை தேயிலை பறிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். வனத்துறையினர் நேரில் வந்து விரட்டினாலும், காட்டுயானைகள் அப்பகுதியில் தொடர்ந்து முகாமிட்டு வருகின்றன.

இந்த நிலையில் கூடலூர் நகராட்சியும், முதுமலை புலிகள் காப்பக எல்லையும் இணையும் பகுதியில் தொரப்பள்ளி பஜார் உள்ளது. இங்கு ஏராளமான கடைகள், வீடுகள் உள்ளன. ஊட்டி- மைசூரு தேசிய நெடுஞ்சாலை என்பதால் ஏராளமான வாகனங்கள் செல்லும் பஜாராக தொரப்பள்ளி உள்ளது. இந்த சாலையில் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

எனவே இந்த வழியாக இரவில் தமிழ்நாடு மற்றும் கேரள மக்கள் கர்நாடகாவுக்கு செல்ல முடியாத நிலை தொடர்கிறது. இதனால் விடியற்காலையில் தொரப்பள்ளிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கு தங்களது வாகனங்களை நிறுத்தி வைக்கின்றனர். பின்னர் காலை 6 மணிக்கு வனத்துறையினர் சோதனைச்சாவடியை திறந்ததும், அங்கிருந்து கர்நாடகாவுக்கு புறப்பட்டு செல்கின்றனர். அதன்படி நேற்று அதிகாலை 4 மணிக்கு தொரப்பள்ளியில் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களுடன் நின்றிருந்தனர்.

அப்போது முதுமலை வனப்பகுதியில் இருந்து காட்டுயானை ஒன்று திடீரென தொரப்பள்ளி பஜாருக்குள் நுழைந்தது. இதை கண்ட சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர். அப்போது கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்று சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த காரை காட்டுயானை சேதப்படுத்தியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வனத்துறையினர் மற்றும் சுற்றுலா பயணிகள் இணைந்து கூச்சலிட்டதால் காட்டுயானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.

இதேபோன்று தொரப்பள்ளி அருகே அள்ளூர்வயல் தனியார் தேயிலை தோட்டத்தில் நேற்று முன்தினம் தொழிலாளர்கள் பணியாற்றி கொண்டிருந்தனர். அப்போது முதுமலை வனப்பகுதியில் இருந்து காட்டுயானை ஒன்று வெளியேறி அந்த தோட்டத்துக்குள் நுழைந்தது. இதை கண்ட தொழிலாளர்கள் பயத்தில் அங்கிருந்து ஓடினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பால்ராஜ்(வயது 50), வள்ளி(49) ஆகிய 2 பேர் கீழே தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தனர்.

இதை கண்ட சக தொழிலாளர்கள் கூச்சலிட்டனர். இதனால் காட்டுயானை அங்கிருந்து சென்றது. பின்னர் படுகாயம் அடைந்த தொழிலாளர்கள் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Next Story