வேறு ஒருவருடன் திருமணமாகி குழந்தைகள் பெற்ற காதலியை சேர்த்து வைக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி காதலன் போராட்டம்


வேறு ஒருவருடன் திருமணமாகி குழந்தைகள் பெற்ற காதலியை சேர்த்து வைக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி காதலன் போராட்டம்
x
தினத்தந்தி 7 May 2019 5:30 AM IST (Updated: 6 May 2019 9:59 PM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லியில் வேறு ஒருவருடன் திருமணமாகி குழந்தைகள் பெற்ற காதலியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி காதலன் தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பூந்தமல்லி,

திருவேற்காட்டை சேர்ந்த 25 வயது பெண் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்குமுன்பு அந்த பெண் திடீரென குழந்தைகளுடன் மாயமானார். இதுகுறித்து அவரது கணவர் பூந்தமல்லியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

விசாரணையில் அந்த இளம்பெண் தனது திருமணத்துக்குமுன்பு காதலித்த ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த முரளி (வயது 30) என்பவரை சந்திக்க சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து குழந்தைகளுடன் இளம்பெண்ணை வரவழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் கணவருடன் செல்ல மறுத்து விட்டதாக தெரிகிறது.

மேலும் காதலனுடன் வாழ விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவருக்கு அறிவுரை கூறி அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அந்த பெண்ணின் காதலன் முரளியை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து முரளி நேற்று முன்தினம் இரவு மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். காதலியை பெற்றோருடன் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர், போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் முரளியை செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்குமாறு கூறினார்கள்.

ஆனால் காதலியை தன்னுடன் அனுப்பி வைக்கும் வரை செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்க மாட்டேன் என்றும், தனது காதலி நேரில் வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து அவருடைய காதலியை போலீசார் அங்கு வரவழைத்தனர். காதலியை பார்த்தவுடன் முரளி செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கினார்.

இதையடுத்து பூந்தமல்லி போலீசார் முரளியை கைது செய்து அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story