குடும்பம் நடத்த மனைவியை அனுப்பாததால் கத்தியால் குத்தி மாமியார் கொலை; மருமகன் கைது


குடும்பம் நடத்த மனைவியை அனுப்பாததால் கத்தியால் குத்தி மாமியார் கொலை; மருமகன் கைது
x
தினத்தந்தி 7 May 2019 5:15 AM IST (Updated: 6 May 2019 11:08 PM IST)
t-max-icont-min-icon

மண்ணிவாக்கத்தில் குடும்பம் நடத்த மனைவியை அனுப்பி வைக்காததால், மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு மண்ணிவாக்கம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த சுஷ்மிதா (24), என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சதீஷ்குமாருக்கும், சுஷ்மிதாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தனது கணவருடன் கோபித்துக்கொண்டு சுஷ்மிதா மண்ணிவாக்கம் இந்திரா நகரில் உள்ள தனது தாயார் சித்ரா (40), வீட்டிற்கு சென்றுவிட்டார். இதற்கிடையே சதீஷ்குமார் தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு பலமுறை அழைத்து உள்ளார்.

ஆனால் சுஷ்மிதா குடும்பம் நடத்த வர மறுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சதீஷ்குமார் குடிபோதையில் மாமியார் வீட்டிற்கு சென்று மாமியார் சித்ராவிடம் மனைவி சுஷ்மிதாவை தன்னுடன் வாழ்வதற்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு மாமியார் சித்ரா தன் மகளை அனுப்பி வைக்க மறுத்துள்ளார். இதனால் சித்ராவிற்கும், சதீஷ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், மறைத்து வைத்திருந்த காய்கறி வெட்டும் கத்தியால் மாமியார் சித்ராவின் வயிற்று, கழுத்துப் பகுதியில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதில் படுகாயமடைந்த, சித்ரா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வளவன் மற்றும் ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சித்ராவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சதீஷ்குமாரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story