வாடகை உயர்த்தி வழங்க கோரி லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்
வாடகை உயர்த்தி வழங்க கோரி லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் கரும்புகள் காயும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
உடுமலை,
உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் 2018–19–ம்ஆண்டு அரவை பருவத்திற்கான கரும்பு அரவை கடந்த மார்ச் மாதம் 30–ந்தேதி தொடங்கியது. நேற்று காலை வரை சுமார் 28 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆலைக்கு உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம், பழனி ஆகிய தாலுகாக்களில் உள்ள ஆலை அங்கத்தினர்களான கரும்பு விவசாயிகளிடம் இருந்து ஒப்பந்த அடிப்படையில் கரும்பு பதிவு செய்யப்பட்டு ஆலைப்பகுதி, குமரலிங்கம், கணியூர், பழனி, நெய்காரப்பட்டி ஆகிய கோட்ட கரும்பு அலுவலகங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த கரும்புகன் தோட்டங்களில் இருந்து லாரி, டிராக்டர், மாட்டு வண்டி ஆகியவற்றின் மூலம் ஆலைக்கு கொண்டுவரப்படும்.
இதில் கரும்பு ஏற்றி வரும் லாரிகள் மற்றும் டிராக்டர்களுக்கான வாடகை எவ்வளவு என்று ஆலை நிர்வாகம் நிர்ணயம் செய்யும். அதன்படி லாரிகள், டிராக்டர்கள் ஆகியவை ஆலையில் பதிவு செய்து கரும்பு முதிர்ச்சி அடிப்படையில் ஆலை நிர்வாகம் குறிப்பிடும் கரும்பு தோட்டங்களுக்கு சென்று கரும்பு ஏற்றிக்கொண்டு ஆலைக்கு வரும்.
இதற்கான வாடகை கி.மீ.க்கு ஒரு டன்னுக்கு எவ்வளவு என்று நிர்ணயிக்கப்படும்.லாரி மற்றும் டிராக்டர் எத்தனை கி.மீ.தூரத்தில் உள்ள கரும்பு தோட்டத்திற்கு சென்று எத்தனை டன் கரும்பு ஏற்றி வருகிறதோ அதை கணக்கிட்டு அந்த லோடுக்குரிய வாடகைத்தொகை வழங்கப்படும்.
அதன்படி தற்போது நடந்து வரும் அரவை பருவத்திற்கு லாரிகள் மற்றும் டிராக்டர்களுக்கான வாடகைப்பட்டியல் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆலையில் சுமார் 50 லாரிகள் மற்றும் டிராக்டர்கள் கரும்பு ஏற்றி வரும் பணியில் உள்ளன. இந்த நிலையில் இந்த வாடகை கட்டுபடியாகாது என்றும் வாடகையை உயர்த்தி வழங்கும் படியும் இந்த லாரி உரிமையாளர்கள் ஆலை நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் நேற்று முன்தினம் ஆலைக்கு கரும்பு ஏற்றி வந்த லாரிகள், ஆலை அரவைக்காக கரும்பு இறக்கப்பட்ட பின்னர் மீண்டும் கரும்பு ஏற்றி வருவதற்காக நேற்று காலை முதல் கரும்பு தோட்டங்களுக்கு செல்லவில்லை. அரவைக்கு கரும்பு இறக்கப்பட்ட பிறகு அந்த லாரிகள் ஆலைக்கு வெளிப்பகுதியில் காலி இடங்களில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அவ்வாறு சுமார் 20 லாரிகள் நின்றன.
அத்துடன் மேற்கொண்டு கரும்பு இறக்கப்பட்ட லாரிகளும் அதன்பிறகு கரும்பு ஏற்றிவரச்செல்லவில்லை. அவர்கள் வாடகையை உயர்த்தினால் தான் கரும்பு ஏற்றி வரச்செல்வோம் என்று கூறியுள்ளனர். லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் சுமை தூக்கும் தொழிளாளர்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களுடன் ஆலை நிர்வாகத்தினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். லாரிகள் மீண்டும் கரும்பு ஏற்றிவரச்செல்லாத நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வரை ஆலை அரவைக்கு தேவையான கரும்பு இருப்பு இருக்கிறது.
அதே சமயம் ஆலை அரவை நிறுத்தப்படாமல் ஆலையை இயக்குவதற்காக கரும்பை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை ஆலை நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் லாரிகள் கரும்பு ஏற்றி வரச்செல்லாமல் காலம் கடத்தினால் கரும்பு தோட்டங்களில் வெட்டி வைக்கப்பட்டுள்ள கரும்புகள் காய்ந்து சர்க்கரை சத்து குறைந்துவிடும் அபாய நிலை உள்ளது. அதனால் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை ஆலை நிர்வாகம் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.