‘நீட்’ தேர்வு எழுதிவிட்டு ஊர் திரும்பிய போது உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் உடல் அடக்கம்
‘நீட்’ தேர்வு எழுதிவிட்டு ஊர் திரும்பிய போது பஸ்சில் மயக்கம் அடைந்து உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதிகாரிகள் வந்து நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் மாணவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கமுதி,
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமத்தை அடுத்த பாப்பனம் கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி, விவசாயி. அவருடைய மகள் சந்தியா (வயது 17). மாற்றுத்திறனாளியான இவர் பிளஸ்–2 தேர்ச்சி பெற்றார். இதையடுத்து மருத்துவ படிப்பில் சேருவதற்கு ஆர்வம் கொண்டிருந்த அவர் அதற்காக நேற்று முன்தினம் மதுரைக்கு வந்து ‘நீட்’ தேர்வு எழுதினார். அதன் பின்னர் அவரும், அவரது தந்தை முனியசாமியும் அரசு பஸ்சில் கமுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே சென்ற போது மாணவி சந்தியா, ஓடும் பஸ்சில் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை உடனடியாக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்பு மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் அங்கு மாணவி சந்தியா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை முனியசாமி, திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சந்தியாவின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர் உடல் கமுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது அவரது உறவினர்கள், சந்தியாவின் உடலை அடக்கம் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் ராமர், கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு சண்முக சுந்தரம், தாசில்தார் கல்யாணகுமார், இன்ஸ்பெக்டர் ஜெயராணி, சப்–இன்ஸ்பெக்டர்கள் முருகன், கண்ணன் ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ‘நீட்’ தேர்வின் போது, கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டதன் காரணமாகவே மாணவி சந்தியா சரியாக சாப்பிடாமல் பட்டினியாக தேர்வு எழுதியதாகவும், அதன் காரணமாக ஏற்பட்ட சோர்வினால் மயக்கம் அடைந்து இறந்து போனதாகவும் அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
சந்தியாவின் இறப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும், அவரது தங்கைக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து கோரிக்கை மனு அளித்தால், அதனை மாவட்ட கலெக்டரிடம் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பின்னர் சமரசம் ஏற்பட்டு, சந்தியாவின் உடலை அடக்கம் செய்தனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.