திருச்சி விமான நிலையத்தில் டி.வி. ஸ்டாண்டில் மறைத்து கடத்தப்பட்ட ரூ.66¼ லட்சம் தங்கம் பறிமுதல் பயணியிடம் அதிகாரிகள் விசாரணை


திருச்சி விமான நிலையத்தில் டி.வி. ஸ்டாண்டில் மறைத்து கடத்தப்பட்ட ரூ.66¼ லட்சம் தங்கம் பறிமுதல் பயணியிடம் அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 7 May 2019 4:00 AM IST (Updated: 7 May 2019 1:40 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமான நிலையத்தில் டி.வி. ஸ்டாண்டில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.66¼ லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய் யப்பட்டது. அதனை கடத்தி வந்த பயணியிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

செம்பட்டு, 

திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் உருவாக்குதல், சோலார் மின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு விதமான வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கிருந்து சென்னை, பெங்களூரு போன்ற பகுதிகளுக்கும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற வெளி நாடுகளுக்கும் விமானங்கள் சென்று வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு வரும் சில பயணிகளிடம் இருந்து கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

தங்கம் கடத்தப்படுவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரி கள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டபோதும், தங்கம் கடத்தி வரப்படுவது தொடர் கிறது. தங்கம் கடத்தலில் பெரும்பாலும் குருவிகளே ஈடுபடுகின்றனர் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளில் உள்ளவர்களுக்கு தேவையான பொருட்களை விமானத்தில் எடுத்துச்சென்று கொடுத்துவிட்டு, அங்கிருந்து இந்தியாவில் உள்ளவர்களுக்கு தேவையான பொருட்களை விமானத்தில் கடத்தி கொண்டு வருபவர்களை குருவி என்று அழைப்பார்கள். ஆனால் குருவிகளின் மூலம் அதிக அளவில் திருச்சி விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவர்களில் பலர் மதுபான வகைகள், செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களையும் கடத்தி வருகின்றனர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று, குருவிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து தங்கம் கடத்தப்படுவது குறைந்திருந்தது.

ஆனால் கடந்த ஒரு மாதமாக திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பெரும்பாலும் குருவிகள் மூலமாக திருச்சி விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் நூதன முறையில் தங்கம் கடத்தப்படுகிறது. இதில் சில பயணிகள் உடலில் மறைத்தும் மற்றும் விளையாட்டு பொருட் களிலும், கம்ப்யூட்டர்களிலும், பல்வேறு விதமான எலக்ட்ரானிக் சாதனங்களில் மறைத்தும் தங்கத்தை கடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பயணி கொண்டு வந்த, சுவரில் டி.வி.யை மாட்ட பயன்படுத்தக்கூடிய ‘ஸ்டாண்டின் கிளாம்புகளில்’ தங்கத்தை தகடாக மாற்றி மறைத்து வைக்கப் பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் அவர், புதுக்கோட்டையை சேர்ந்த முருகேஷ் (வயது 34) என்பதும், 2 கிலோ 95 கிராம் எடையுள்ள தங்கத்தை தகடாக மாற்றி, டி.வி. ‘ஸ்டாண்ட் கிளாம்புகளில்’ மறைத்து அவர் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து தங்க தகடுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், முருகே ஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.66 லட்சத்து 25 ஆயிரம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 More update

Next Story