மக்களை சந்தித்தால் வெற்றி பெற முடியாது என்பதால் குறுக்கு வழியில் செயல்படுகின்றனர் அ.தி.மு.க. மீது டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு


மக்களை சந்தித்தால் வெற்றி பெற முடியாது என்பதால் குறுக்கு வழியில் செயல்படுகின்றனர் அ.தி.மு.க. மீது டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 May 2019 3:45 AM IST (Updated: 7 May 2019 1:40 AM IST)
t-max-icont-min-icon

மக்களை சந்தித்தால் வெற்றி பெற முடியாது என்பதால் குறுக்கு வழியில் செயல்படுகின்றனர் என்று அ.தி.மு.க. மீது டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டினார்.

தூத்துக்குடி,

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் சுந்தரராஜை ஆதரித்து கட்சி தலைவர் டி.டி.வி.தினகரன் நேற்று 2-வது நாளாக தேர்தல் பிரசாரம் செய்தார். அவர் ஒட்டநத்தம் கிராமத்தில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து மணியாச்சி, புதியம்புத்தூர், முப்பிலிவெட்டி, ஓட்டப்பிடாரம், குறுக்குச்சாலை ஆகிய பகுதிகளில் பரிசு பெட்டகம் சின்னத்துக்கு வாக்கு கேட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஓட்டப்பிடாரம் தொகுதியில் இடைத்தேர்தல் வந்து உள்ளது. உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மீண்டும் போட்டியிடும் சூழல் வந்து உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம், மாபா பாண்டியராஜன் உள்பட 11 பேரை உடன் வைத்து உள்ளார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்த 18 பேரை தகுதி நீக்கம் செய்தனர். மக்கள் விரும்பாத இந்த ஆட்சி தொடர வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்பதற்காக தேர்தலை சந்திக்கிறோம். 18 பேர் தகுதி நீக்கம் தவறு என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும்.

தற்போதைய ஆட்சியில் மக்களை பற்றி சிந்திக்கவில்லை. மக்களை சந்தித்தால் வெற்றி பெற முடியாது என்பதால் குறுக்கு வழியில் செயல்படுகின்றனர். சட்டத்தை மீறி செயல்படுகின்றனர். எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆதரவாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

மந்திரவாதி முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என்று கோரி, 18 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் மனு கொடுக்க சென்றனர். ஆட்சியை கலைக்க சொல்லவில்லை. முதல்-அமைச்சர் உள்பட பல அமைச்சர்கள் கையில் பல நிறங்களில் கயிறு கட்டி உள்ளனர். தெலுங்கு படத்தில் வரும் மந்திரவாதி போன்று இருக்கிறார்கள். என்ன கயிறு கட்டினாலும் தெய்வம் நின்று கொல்லும். ஒரு கட்சியின் உயிர், ரத்தம், சதையாக இருப்பது தொண்டர்கள். அவர்கள் எல்லோரும் நம்முடன் இருக்கிறார்கள். அங்கு இருப்பவர்கள் எல்லாம் டெண்டர்கள். அமைச்சர் பதவி போன பிறகு அனைவரும் இங்கு வந்து விடுவார்கள்.

தமிழகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தடுத்து நிறுத்திய திட்டங்கள் அனைத்தையும் தற்போது அனுமதித்து உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம், காற்று மாசு ஏற்படுகிறது என்று போராடியவர்களை சமூகவிரோதிகள் என்றார்கள். அவர்களை துப்பாக்கியால் சுட்டார்கள். தற்போது அரசு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது.

3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீசு கொடுத்தார்கள். அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை வாங்கி உள்ளனர். இதனால் அவர்கள் ஆட்டம் காலியாகி விட்டது. ஓட்டப்பிடாரத்தில் சுந்தரராஜ் வெற்றி பெறுவதால், வருங்காலத்தில் அரசியல்வாதிகள் துரோகத்தை பற்றி நினைக்காமல் இருக்க வேண்டும். மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

புதியம்புத்தூரை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். ஆயத்த ஆடை பூங்கா அமைக்கப்பட வேண்டும். புறவழிச்சாலை அமைக்க வேண்டும். சாலை வசதி மேம்படுத்த வேண்டும். தாமிரபரணியில் இருந்து மலர்க்குளத்துக்கு தண்ணீர் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் மீண்டும் மக்களாட்சியை உருவாக்கி, மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுக்க அ.ம.மு.க. வேட்பாளர் சுந்தரராஜிக்கு பரிசு பெட்டகம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரசாரத்தில், அ.ம.மு.க. அமைப்பு செயலாளர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா, மாவட்ட இளம்பெண்கள் பாசறை செயலாளர் முருககண்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜயராஜ், ஒன்றிய செயலாளர் முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
1 More update

Next Story