தஞ்சை அருகே பரிதாபம், வங்கி பணிக்கு தேர்வான வாலிபர், குளத்தில் மூழ்கி சாவு


தஞ்சை அருகே பரிதாபம், வங்கி பணிக்கு தேர்வான வாலிபர், குளத்தில் மூழ்கி சாவு
x
தினத்தந்தி 7 May 2019 4:00 AM IST (Updated: 7 May 2019 1:40 AM IST)
t-max-icont-min-icon

வங்கி பணிக்கு தேர்வான வாலிபர், குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். தஞ்சை அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

தஞ்சாவூர்,

தஞ்சை பூக்கார மண்ணையார் தெருவை சேர்ந்தவர் உத்திராபதி(வயது27). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் வங்கி ஊழியர் பணிக்கான தேர்வில் வெற்றி பெற்று அடுத்த வாரம் கும்பகோணத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணியில் சேர இருந்தார்.

இந்த நிலையில் உத்திராபதி, தஞ்சையை அடுத்த சூரக்கோட்டையில் உள்ள ஒரு குளத்திற்கு குளிக்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். குளிக்க சென்றவர் நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குளத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு அவருடைய உடைகள் மட்டும் கரையில் இருந்தது. அவரை காணவில்லை. இது குறித்து தஞ்சை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உத்திராபதியை தேடினர். ஆனால் இரவு நேரம் ஆகி விட்டதால் தொடர்ந்து அவர்களால் தேட முடியவில்லை. இந்த நிலையில் நேற்று காலை உத்திராபதி உடல் கரை ஒதுங்கியது. இதனை பார்த்தவர்கள் இது குறித்து தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உத்திராபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குளிப்பதற்காக சென்ற அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டது தெரிய வந்தது.

இது குறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story