வங்கி அதிகாரி போல் நடித்து பெண்ணிடம் பணம் மோசடி செய்தவர் போலீஸ்காரரா? விசாரணை நடத்தப்படும் என சூப்பிரண்டு தகவல்
வங்கி அதிகாரி போல் நடித்து பெண்ணிடம் பணம் மோசடியில் ஈடுபட்டவர் போலீஸ்காரரா? என்று விசாரணை நடத்தப்படும் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
தேனி,
பெரியகுளம் அருகே உள்ள கீழகாமக்காபட்டியை சேர்ந்த சிங்கராஜ் மனைவி காந்தியம்மாள். இவர் கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி ஆயுள் காப்பீட்டு தொகை செலுத்துவதற்காக தேனிக்கு வந்தார். தேனி பெரியகுளம் சாலையில் உள்ள ஒரு வங்கியில் பணத்தை செலுத்தச் சென்ற போது, ஒரு நபர் தன்னை வங்கி அதிகாரி என்று கூறி ஏமாற்றி, அவரிடம் இருந்து ரூ.16 ஆயிரம் பணத்தை வாங்கிச் சென்றார்.
வங்கி அதிகாரி போல் நடித்து பண மோசடி செய்தது தொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின் பேரில் தேனி போலீசார் கடந்த வாரம் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட காந்தியம்மாள் தனது கணவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று வந்தார். தன்னை ஏமாற்றியவர் ஒரு போலீஸ்காரர் என்றும், அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அங்கு இருந்த போலீசாரிடம் அவர்கள் முறையிட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதால் தேனி போலீஸ் நிலையம் செல்லுமாறு அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காந்தியம்மாள் கூறுகையில், ‘சம்பவம் நடந்த அன்றே நான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். ஆனால், அன்று வழக்குப்பதிவு செய்யவில்லை. மறுநாள் எனது மகனுடன் பணத்தை செலுத்த வங்கிக்கு மீண்டும் சென்ற போது அங்கு என்னை ஏமாற்றிய நபர் அமர்ந்து இருந்தார். அவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றோம். அப்போது அங்கு இருந்த போலீசார், நாங்கள் பிடித்துச் சென்றது ஒரு போலீஸ்காரர் என்றும், அவர் போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் பணியாற்றுவதாகவும் கூறினர். மேலும், அவர் அப்படி செய்து இருக்க மாட்டார் என்று கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. புகார் அளித்து பல நாட்கள் கழித்து தான் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே, இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். இந்த பெண்ணின் குற்றச்சாட்டு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் கேட்டபோது, ‘இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
Related Tags :
Next Story