விஜயாப்புரா உள்ளிட்ட மாவட்டங்களில் நிலவி வரும் கடும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து மந்திரி டி.கே.சிவக்குமார், அதிகாரிகளுடன் ஆலோசனை


விஜயாப்புரா உள்ளிட்ட மாவட்டங்களில் நிலவி வரும் கடும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து மந்திரி டி.கே.சிவக்குமார், அதிகாரிகளுடன் ஆலோசனை
x
தினத்தந்தி 7 May 2019 4:57 AM IST (Updated: 7 May 2019 4:57 AM IST)
t-max-icont-min-icon

விஜயாப்புரா உள்ளிட்ட மாவட்டங்களில் நிலவி வரும் கடும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து மந்திரி டி.கே.சிவக்குமார், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பெலகாவி,

வட கர்நாடகத்தில் விஜயாப்புரா, பெலகாவி, ராய்ச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்காக மராட்டிய அரசு கொய்னா அணையில் இருந்து கிருஷ்ணா ஆற்றில் நீரை திறந்துவிடுவதாக அறிவித்தது.

இதுகுறித்த ஆலோசனை கூட்டம் நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் தலைமையில் பெலகாவியில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் சதீஸ் ஜார்கிகோளி, ஆர்.பி.திம்மாப்பூர், எம்.பி.க்கள் கத்திகவுடர், பிரகாஷ் ஜுக்கேரி மற்றும் அந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதில் விஜயாப்புரா உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு குறித்தும், மராட்டிய மாநிலம் தண்ணீர் திறந்துவிடுவதாக உறுதி அளித்திருப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பு மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கிருஷ்ணா ஆற்றில் நீர் வற்றிவிட்டது. இதனால் விஜயாப்புரா, பெலகாவி உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு்ள்ளது. கிருஷ்ணா ஆற்றில் நீரை திறந்துவிடுமாறு மராட்டிய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீரை திறந்துவிடுவதாக அந்த மாநில அரசு கூறியது. ஆனால் நீர் திறந்துவிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மராட்டிய மாநில நீர்ப்பாசனத்துறை மந்திரியை தொடர்பு கொண்டு பேச நான் முயற்சி செய்து வருகிறேன்.

இது மட்டுமின்றி மகதாயி நதிநீர் பிரச்சினை குறித்தும் விவாதிக்கப்படும். மகதாயி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. இந்த விஷயத்தில் மத்திய அரசு இந்த தீர்ப்பை அரசிதழில் வெளியிட்ட மறுநாளே குடிநீர் திட்ட பணிகள் தொடங்கப்படும். ஆனால் மத்திய அரசு இந்த விஷயத்தில் அலட்சியமாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story