பாதிக்கப்பட்ட கர்நாடக மாணவர்கள் 600 பேர் ‘நீட்’ தேர்வு எழுத மீண்டும் வாய்ப்பு - மத்திய மந்திரி அறிவிப்பு


பாதிக்கப்பட்ட கர்நாடக மாணவர்கள் 600 பேர் ‘நீட்’ தேர்வு எழுத மீண்டும் வாய்ப்பு - மத்திய மந்திரி அறிவிப்பு
x
தினத்தந்தி 7 May 2019 5:11 AM IST (Updated: 7 May 2019 5:11 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் தாமதத்தால் தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்ட கர்நாடகத்தை சேர்ந்த 600 மாணவர்கள் மீண்டும் ‘நீட்’ தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று அறிவித்தார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (நீட்) நேற்று முன்தினம் பெங்களூரு உள்பட மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது.

பெங்களூரு மையத்தில் தேர்வு எழுத பல்லாரி உள்பட வடகர்நாடகத்தை சேர்ந்த சுமார் 600 மாணவர்கள் ஹம்பி எக்ஸ்பிரஸ் மூலம் பெங்களூவுருக்கு வந்தனர். ஆனால் அந்த ரெயில் 7½ மணி நேரம் தாமதமாக வந்ததால், அந்த மாணவர்கள் அனைவரும் நீட் தேர்வு எழுத முடியாமல் போனது. இதனால் இந்த மாணவர்கள் கண்ணீர்விட்டு அழுதனர்.

ரெயில் தாமதமான விஷயத்தில் ரெயில்வே துறைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீண்டும் நீட் தேர்வு எழு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி ரெயில் தாமதத்தால் மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாமல் போனது குறித்து ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து கர்நாடக அரசின் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, ரெயில் தாமதத்தால் 600 மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாமல் போன நிலை குறித்தும், அவர்களுக்கு தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை பரிசீலிப்பதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். இதுகுறித்து விரைவில் முடிவு எடுப்பதாகவும் அவர்கள் கூறினர்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு மத்திய மந்திரி சதானந்த கவுடா கடிதம் எழுதி இருந்தார்.

இந்த நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துைற மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கர்நாடகத்தில் ரெயில் தாமதமானதால் நீட் தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுத மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று நேற்று மாலை அறிவித்தார். வருகிற 20-ந் தேதி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீட் தேர்வு நடத்தப்படும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

பானி புயல் காரணமாக ஒடிசாவில் நீட் தேர்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. ஒடிசாவிலும் வருகிற 20-ந் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு மையங்களில் எந்த மாற்றமும் இல்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ரெயில் தாமதத்தால் நீட் தேர்வு எழுத முடியாமல் வாய்பை இழந்த மாணவர்களுக்கு தேர்வு எழுத மீண்டும் வாய்ப்பு அளித்த மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து உள்ளார். அதுபோல் மத்திய மந்திரி சதானந்த கவுடாவும் மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு நன்றி தெரிவித்து உள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில் உரிய நேரத்தில் நல்ல முடிவு எடுத்த உங்களுக்கு நன்றி என்று தெரிவித்து உள்ளார்.

மற்றொரு டுவிட்டர் பதிவில் “மாணவர்களே மகிழ்ச்சி கொள்ளுங்கள். நாங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறோம். இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள்.” என்று சதானந்த கவுடா கூறி உள்ளார்.

நேற்று முன்தினம் நீட் தேர்வு எழுத முடியாமல் தவறவிட்ட மாணவர்கள் மீண்டும் நீட் தேர்வு எழுத வாய்ப்பு கிடைத்து இருப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story