சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு, பா.ஜனதா பிரமுகர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு - 2 பேர் கைது


சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு, பா.ஜனதா பிரமுகர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு - 2 பேர் கைது
x
தினத்தந்தி 6 May 2019 10:30 PM GMT (Updated: 6 May 2019 11:46 PM GMT)

திருத்துறைப்பூண்டி அருகே சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக பா.ஜனதா பிரமுகர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தலைக்காடு பகுதியில் சம்பவத்தன்று சிலர் வாகனங்களில் வந்தவர்களிடம் ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதில் முள்ளூரை சேர்ந்த வெங்கடேசன்(வயது48) என்பவருடைய வேனின் கண்ணாடி உடைக்கப்பட்டது. அப்போது அந்த வழியாக பாமணியை சேர்ந்த பிரகாஷ் (24) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவருடைய மோட்டார் சைக்கிளையும் ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் வழிமறித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சம்மன் கொடுக்கும் பணிக்காக மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக சென்று கொண்டிருந்தார்.

தகராறு நடப்பதை பார்த்த அவர் உடனடியாக திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், ஏட்டு மதியழகன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று தகராறில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்றனர்.

இதில் தலைக்காடு பகுதியை சேர்ந்த சுபாஷ்சந்திரபோஸ் என்பவர் மட்டும் போலீசாரிடம் பிடிபட்டார். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து சுபாஷ்சந்திரபோசை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், பாலசுப்பிரமணியன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.

தலைக்காடு கடைத்தெரு பகுதியில் சென்றபோது அங்கு பிரகாசின் தந்தை கணேசன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். அவர்கள் சுபாஷ்சந்திரபோசை அரிவாளால் வெட்ட முயற்சி செய்தனர். அதை தடுக்க முயன்றபோது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமாரின் கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு சுபாஷ்சந்திரபோஸ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

கணேசனும் தனது ஆதரவாளர்களுடன் தப்பி சென்றார். அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து சிவக்குமார் திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்கார்த்திகுமார், இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வாகீஸ்வரன், புஷ்பநாதன் ஆகியோர் கணேசன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதில் கணேசன், பா.ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் ஆவார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பிரகாஷ், அவருடைய உறவினர் விஜய்(28) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

மற்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதேபோல வேனின் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடர்பாக அதன் உரிமையாளர் வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் சுபாஷ்சந்திரபோஸ், அவருடைய நண்பர்கள் இளமாறன் (23), வீரசேகரன் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் இளமாறன் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 

Next Story