சேவூரில் சூறாவளி காற்றுடன் மழை: 5 ஆயிரத்து 500 வாழைகள் சேதம்


சேவூரில் சூறாவளி காற்றுடன் மழை: 5 ஆயிரத்து 500 வாழைகள் சேதம்
x
தினத்தந்தி 7 May 2019 10:00 PM GMT (Updated: 2019-05-07T22:38:51+05:30)

சேவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை திடீரென சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் மின்கம்பங்கள், மரங்கள் மற்றும் 5 ஆயிரத்து 500 வாழை மரங்கள் சேதமடைந்தன.மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் மின்சாரமின்றி பெரும் அவதிப்பட்டனர்.

சேவூர்,

அவினாசியை அடுத்த சேவூரில் கடந்த 3 நாட்களாக அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் தொடங்கியதையடுத்து வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பகலில் வெயில் அதிகம் காணப்பட்டது. ஆனால் மாலை திடீரென சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில் சேவூர், பாப்பாங்குளம், வேட்டுவபாளையம், கருமாபாளையம், போத்தம்பாளையம், முறியாண்டாம்பாளையம், தண்டுக்காரன் பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

இதனால் வேட்டுவபாளையம் ஊராட்சி, புலிப்பார் ஊராட்சி, வடுகபாளையம் ஊராட்சி, பாப்பாங்குளம் ஊராட்சி பகுதிகளில் 10 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் வாழை மரங்கள் சரிந்தன. இதில் 5 ஆயிரத்து 500–க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முற்றிலும் சாய்ந்து சேதமடைந்தன.

மேலும் சேவூர், பந்தம்பாளையம், சந்தையப்பாளையம், ஒழுங்கு முறை விற்பனை கூடம் அருகில், காமராஜ் நகர் ஆகிய பகுதிகளில்சாலையோரம் இருந்த 10–க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தன. இதனால் ஒரு விதத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கோடை வெயிலுக்கு இதமாக மழை பெய்தாலும் மின்கம்பங்கள், மரங்கள் சேதம் அடைந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

மேலும் சேவூர் ரெயின்போ காலனி, பந்தம்பாளையம், தேவேந்திர நகர், ஏரிமேடு மற்றும் ஆங்காங்கே சாலையோர மரங்கள் முறிந்து சேதமடைந்தன. மரங்கள் முறிந்து விழுந்ததில் ரெயின்போ காலனியில் ஒரு வீட்டில் காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்தது.

நேற்றுமுன்தினம் மாலையில் சூறாவளி காற்றின் காரணமாக சேவூரில் கனமழை பெய்ததால் மாலை 4 மணிக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நேற்றும் மதியம் 2 மணிக்கு தான் மின்சார இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டது. அதனால் பொதுமக்கள், தொழிலாளர்கள், தொழிற்கூடத்தினர், பனியன் நிறுவனத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டனர். பொதுமக்கள் விடிய விடிய தூக்கமின்றி பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.


Related Tags :
Next Story