தாளவாடி பகுதியில் சூறாவளிக்காற்றுடன் கொட்டி தீர்த்த மழை; அந்தியூரில் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்து நாசம்
தாளவாடி பகுதியில் சூறாவளிக்காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. அந்தியூரில் வீசிய சூறாவளிக்காற்றால் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்து நாசம் ஆனது.
தாளவாடி,
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்தது. மழை பெய்யாதா? என பொதுமக்கள் ஏங்கி இருந்தனர். நேற்றும் வழக்கம்போல் காலையில் இருந்து வெயில் சுட்டெரித்தது.
இந்த நிலையில் மாலை 3 மணி அளவில் தாளவாடி, இக்களூர், தலமலை, ஆசனூர், திம்பம், திகினாரை, கல்மண்டிபுரம், தொட்டகாஜனூர், கும்டாபுரம், மரூர், காந்தி நகர் காலனி, சோளகர் தொட்டி, கும்பாரகுண்டி, ராமாபுரம் உள்பட பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் இடி, மின்னலுடன் பலத்த மழையாக மாறியதுடன், சூறாவளிக்காற்றும் வீசியது. இந்த மழை 4 மணி வரை கொட்டி தீர்த்தது.
இதன்காரணமாக ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி நின்றது. மேலும் காந்தி நகர் காலனியில் தலமலை சாலையில் உள்ள 3 வீடுகளில் வெள்ளம் புகுந்தது.
அதுமட்டுமின்றி சூறாவளிக்காற்று வீசிக்கொண்டிருந்தபோது சோளகர்தொட்டியில் உள்ள பட்டுநூல் குடோன் ஒன்றில் 20–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த குடோனின் சிமெண்டு அட்டையிலான மேற்கூரைகள் சூறாவளிக்காற்றில் பறந்தன.
இதில் செங்கற்கல் பெயர்ந்து விழுந்ததில் குடோனில் வேலை செய்து கொண்டிருந்த திகினாரையை சேர்ந்த கிட்டம்மா (வயது 45), ரத்தினம்மா (45), தாயம்மா (45), சோளகர்தொட்டியை சேர்ந்த கவுரி (26), கடம்பூரை சேர்ந்த பேபி ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
உடனே அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு தாளவாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ராமாபுரத்தில் வீசிய சூறாவளிக்காற்றால் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்து நாசம் ஆனது.
இதேபோல் அந்தியூர், புதுக்காடு, விலாங்குட்டை, உப்புகொடிக்கால் தோட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 4 மணி முதல் 4.30 மணி வரை சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்தன. மேலும் அந்த பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வெற்றிலை கொடிகளும் சாய்ந்து நாசம் ஆனது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘நாங்கள் பல இடங்களில் நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்கி வாழைகளை பயிரிட்டோம். தண்ணீர் பற்றாக்குறையிலும் மிகவும் கஷ்டப்பட்டு வாழைகளை வளர்த்து வந்தோம். இன்று (அதாவது) வீசிய சூறாவளிக்காற்றில் அனைத்து வாழைகளும் சாயந்து நாசம் ஆகிவிட்டது. எனவே எங்களுக்கு அதிகாரிகள் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
பெருந்துறை, பெத்தாம்பாளையம், திங்களூர், நல்லாம்பட்டி, சீனாபுரம் ஆகிய பகுதிகளில் காற்றுடன் மழை பெய்தது.
தாளவாடி பகுதியில் மழை பெய்தபோது தொட்டமுதிரையை சேர்ந்த மணிகண்டன் (21) என்பவர் தன் வீட்டின் அருகே நின்றபடி செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்னல் தாக்கியது. இதில் அவருடைய மூக்கில் இருந்து ரத்தம் வழிய தொடங்கியது. ரத்தம் நிற்காமல் தொடர்ந்து அதிக அளவில் வழிந்து கொண்டிருந்ததால், அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தாளவாடி அரசு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.