திட்டக்குடி அருகே சினிமாவை மிஞ்சிய சம்பவம்: துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து காதல் ஜோடி தற்கொலை


திட்டக்குடி அருகே சினிமாவை மிஞ்சிய சம்பவம்: துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து காதல் ஜோடி தற்கொலை
x
தினத்தந்தி 8 May 2019 5:15 AM IST (Updated: 7 May 2019 11:59 PM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி அருகே பெற்றோர் எதிர்ப்பு தெரி வித்ததால் துப்பட்டாவால் கட்டிக்கொண்டு காதல் ஜோடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது.

ராமநத்தம்,

திட்டக்குடி அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு. இவரது மகன் சிவரஞ்சன் (வயது 18). இவர் கீழகல்பூண்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார்.

கீழகல்பூண்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் அபிராமி(16). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மேல் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். பள்ளிக்கூடத்துக்கு சென்று வந்த போது சிவரஞ்சனுக்கும், அபிராமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இந்த நிலையில் இருவரும் பொதுத்தேர்வு எழுதி முடித்ததும் விடுமுறையில் வீட்டில் இருந்து வந்தனர். இருப்பினும் பல நேரங்களில் சிவரஞ்சனும், அபிராமியும் பொது இடங்களில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்ததாக தெரிகிறது.

இதற்கிடையே இவர்களது காதல் விவகாரம் அவர்களின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனால் அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சிவரஞ்சனையும், அபிராமியையும் சந்திக்க விடாமல் தடுத்து வந்தனர்.

இதை மீறி நேற்று முன்தினம் மாலை சிவரஞ்சனும், அபிராமியும் வீட்டை விட்டு வெளியேறி தொழுதூரை சேர்ந்த வேந்தன் என்பவரது விளை நிலத்துக்கு சென்று தனிமையில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இரவில் அங்கு வந்த வேந்தன், அவர்களை அங்கிருந்து விரட்டி விட்டார். இதையடுத்து அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.ஆனால் காதல் ஜோடி வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் அவர்கள் 2 பேரையும் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும் அவர்கள் கிடைக்கவில்லை. இது பற்றி தகவல் அறிந்த வேந்தன் தனது நிலத்துக்கு சென்று பார்த்தார். அப்போது அவரது கிணற்றின் அருகில் 2 ஜோடி செருப்புகள் கிடந்தன.

உடனே அவர் போலீசாருக்கும், சிவரஞ்சன், அபிராமி ஆகியோரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் திட்டக்குடி தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது சிவரஞ்சனும், அபிராமியும் துப்பட்டாவால் உடலை சுற்றி கட்டிய நிலையில் நீரில் மூழ்கிக் கிடந்தது தெரிந்தது.

பின்னர் இருவரது உடலையும் கிணற்றில் இருந்து போலீசார், தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதற்கிடையே அங்கு வந்த இருவரது பெற்றோர் மற்றும் உறவினர்களும் அவர்களது உடல்களை பார்த்து கதறி அழுதனர். இது காண்போரின் நெஞ்சை கரைய வைப்பதாக இருந்தது.

இதையடுத்து போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், காதலுக்கு அவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இனி சேர்ந்து வாழ முடியாது என்று எண்ணிய இருவரும் ஒன்றாகவே சாவோம் என்ற விபரீத முடிவை எடுத்துள்ளனர். அதன்படி இருவரும் துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

புன்னகை மன்னன் சினிமா படத்தில் நாயகனும், நாயகியும் ஜோடியாக மலை உச்சியில் இருந்து குதிப்பார்கள். அந்த சினிமா படத்தை மிஞ்சும் வகையில் இவர்கள் துப்பட்டாவால் தங்கள் உடலை சுற்றி கட்டிக்கொண்டு ஜோடியாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story