செங்கல்பட்டு அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
செங்கல்பட்டு அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு,
காஞ்சீபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்துள்ள பாலூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக இங்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் சுமார் 100–க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதுகுறித்து மறியலில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:–
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நீர் நிலைகள் அதிக பரப்பளவில் உள்ள பகுதி பாலூர். இந்த கிராமத்தை கடந்துதான் பாலாறு செல்கிறது. இருப்பினும் பாலாற்றங்கரையை ஒட்டியுள்ள பாலூர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த ஒருமாத காலமாக குடிநீர் வழங்கவில்லை. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.