திருப்பூர் அருகே கஞ்சா விற்பனை செய்த தந்தை– மகன் கைது
திருப்பூர் அருகே கஞ்சா விற்பனை செய்த தந்தை–மகனை போலீசார் கைது செய்தனர்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் பி.என்.ரோடு நெருப்பெரிச்சலை அடுத்த சமத்துவபுரம் பாரதிநகரை சேர்ந்த செல்வம் மற்றும் அவருடைய மகன் மணிகண்டன் ஆகியோர் ஆந்திராவில் இருந்து நண்பர் மூலமாக கஞ்சாவை திருப்பூருக்கு கொண்டு வந்து அந்த பகுதியில் விற்பனை செய்து வருவதாக கோவை போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கண்காணித்து வந்தனர். அப்போது அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று திருப்பூர் அருகே நெருப்பெரிச்சல் சமத்துவபுரம் பகுதிக்கு போலீசார் சென்று அங்கு இருவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது போலீசார் சாதாரண உடையில் சென்றதால் செல்வம், மணிகண்டன் ஆகியோர் போலீசாரை தாக்க முயன்றதுடன், அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை துரத்தி பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.