உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு, தந்தையை அடித்துக் கொன்ற வாலிபர் - மதுகுடிக்க பணம் தர மறுத்ததால் ஆத்திரம்
உளுந்தூர்பேட்டை அருகே மதுகுடிக்க பணம் தர மறுத்த தந்தையை, மகனே அடித்துக் கொலை செய்தார். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
உளுந்தூர்பேட்டை,
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புதுக்கேணி கிராமத்தை சேர்ந்தவர் கலியன் (வயது 70), தொழிலாளி. இவருக்கு இருசன்(28), சின்னசாமி என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் இருசனுக்கு மட்டும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான இருசன், தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
சம்பவத்தன்று இருசன் குடித்து விட்டு வந்ததை, அவரது மனைவி தட்டிக் கேட்டார். இதனால் கணவன்- மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அவரது மனைவி, இருசனை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மதியம் இருசன், தனது தந்தை கலியனிடம் மது குடிக்க பணம் தருமாறு கேட்டார். அதற்கு அவர் தற்போது தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார். இதனால் இருசனுக்கும், கலியனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த இருசன், கலியனை தாக்கினார். பின்னர் வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து வந்து கலியனின் தலையில் அடித்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனே இருசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சின்னசாமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கலியனை சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கலியன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சின்னசாமி, எடைக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் வெளியூர் தப்பி செல்வதற்காக புதுக்கேணி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த இருசனை கைது செய்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுகுடிக்க பணம் தர மறுத்ததால் தந்தையை மகனே அடித்துக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story