கடலூர், கலெக்டர் அலுவலகத்திற்குள் பாம்பு புகுந்தது - ஊழியர்கள் பீதி
கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்குள் பாம்பு புகுந்ததால் ஊழியர்கள் பீதியடைந்தனர்.
கடலூர்,
கடலூர் குண்டுசாலையில் புதிய கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று காலை ஊழியர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் தரை தளத்தில் அமைந்துள்ள மாவட்ட தகவலியல் மைய அலுவலகமும் வழக்கம் போல் பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்தது.
இந்த நிலையில் இந்த அலுவலகத்துக்கு முன் உள்ள வராண்டாவில் 5 அடி நீளம் உள்ள சாரை பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதனை பார்த்த ஊழியர்கள் பீதியில் அலறினார்கள், அவர்களின் கூச்சலால் பாம்பு வேகமாக சென்று அருகில் உள்ள மாவட்ட தகவலியல் மைய அலுவலகத்துக்குள் நுழைய முயற்சித்தது. இதனால் அந்த அலுவலகத்துக்குள் பணியில் இருந்தவர்களை வெளியில் வரவேண்டாம் என்று செல்போன் மூலம் வெளியே இருந்த சக ஊழியர்கள் எச்சரித்தனர்.
உடனே இது பற்றி பாம்பு பிடி நிபுணர் செல்லாவுக்கு தகவல் தெரிவித்தனர் அவரும் வேக, வேகமாக வந்து பாம்பை லாவகமாக பிடித்தார். இதன் பிறகே ஊழியர்கள் நிம்மதியடைந்தனர். இதற்கு முன்பு இதேபோன்று ஏற்கனவே ஒரு சாரை பாம்பு கலெக்டர் அலுவலகத்தில் பிடிப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story