பிரதமர் மோடிக்கு பயந்து கொண்டு ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களை எடப்பாடி பழனிசாமி அமல்படுத்துகிறார் - சூலூர் பிரசாரத்தில் டி.டி.வி. தினகரன் தாக்கு


பிரதமர் மோடிக்கு பயந்து கொண்டு ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களை எடப்பாடி பழனிசாமி அமல்படுத்துகிறார் - சூலூர் பிரசாரத்தில் டி.டி.வி. தினகரன் தாக்கு
x
தினத்தந்தி 8 May 2019 11:00 PM GMT (Updated: 8 May 2019 8:43 PM GMT)

‘பிரதமர் நரேந்திரமோடிக்கு பயந்து கொண்டு ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடைமுறைப்படுத்துகிறார்’ என்று சூலூர் தேர்தல் பிரசார கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் கூறினார்.

சூலூர்,

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சுகுமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று 2-வது நாளாக பிரசாரம் செய்தார். அவர் கள்ளப்பாளையம், சின்னக்குயிலி, இடையர்பாளையம், அக்கநாயக்கன்பாளையம், வடவள்ளி, செஞ்சேரிமலை, ஜல்லிப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் திறந்தவேனில் சென்று பரிசு பெட்டகத்திற்கு ஓட்டு கேட்டு பேசினார். அப்போது டி.டி.வி. தினகரன் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிற துரோக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டிய கடமை வாக்காளர்களாகிய உங்களுக்கு உள்ளது. அதற்கு காரணம் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த ஆட்சியை தொடர்ந்து நடத்திட வேண்டி சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்பு, எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் ஆக்கினார். ஆனால் இந்த கட்சி எக்கேடு கெட்டு போனால் என்ன என்று சசிகலா நினைத்திருந்தால் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் என்று மார்தட்டிக் கொண்டிருக்க முடியாது. எடப்பாடி பழனிசாமியை ஒரு சகோதரராக நினைத்து சசிகலா ஆட்சியை விட்டு சென்றார். ஆனால் அவர் துரோகம் செய்து விட்டார். அவர் செய்தது சரியா என்பதற்கு வாக்காளர்களாகிய நீங்கள் தான் இந்த தேர்தல் மூலம் பதில் அளிக்க வேண்டும்.

மோடியின் ஏஜெண்டாக செயல்படும் இவர்கள் ஜெயலலிதா எந்தெந்த திட்டங்களையெல்லாம் எதிர்த்தாரோ அதையெல்லாம் ஆதரிக்கிறார்கள். நீட் தேர்வு வேண்டாம் என்று ஜெயலலிதா போராடினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதை ஆதரிக்கிறார். மோடிக்கு பயந்து கொண்டு விவசாயிகளை பாதிக்கிற திட்டங்களை கொண்டு வருகிறார்கள். வியாபாரிகளை பாதிக்கும் ஜி.எஸ்.டி.யை ஜெயலலிதா வரவிடவில்லை. ஆனால் எடப்பாடி அதை ஆதரித்தார். இது ஜெயலலிதா ஆட்சி என்று கூறி எடப்பாடி பழனிசாமி மக்களை ஏமாற்றி வருகிறார். அவர் இரட்டை இலையை காட்டி ஏமாற்றுகிறார். இதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகளுக்குத் தான் வாக்களிப்போம் என்ற நிலையில் தான் மக்கள் உள்ளனர்.

ஜெயலலிதாவின் பெயரை சொல்லி ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவருடைய உருவப்படத்தை சட்டமன்றத்தில் வைக்கக்கூடாது என்று கூறிய விஜயகாந்த் கட்சியுடன் இவர்கள் கூட்டணி வைத்துள்ளனர். ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் கட்டக்கூடாது என்று நீதிமன்றம் வரை சென்ற பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டு வைத்துள்ளனர். துரோகம் செய்தவர்கள் எப்படி மக்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள்.

எங்களை வெற்றி பெற செய்தால் சூலூர் தொகுதியில் வேளாண் உதவி மையம் அமைக்கப்படும். விசைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். பரம்பிக்குளம்-ஆழியாறு மூலம் இந்த பகுதிக்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். 60 வயதான விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே தமிழகத்தில் அனைத்து தரப்பினருக்கும் பலன் அளிக்கும் வகையில் சிறப்பான மக்களாட்சியை அமைத்து தர நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் பரிசு பெட்டகம். உங்களது வெற்றி வேட்பாளர் சுகுமாரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறினார்.

தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் அமைச்சர் உடுமலை சண்முகவேல், சேலஞ்சர் துரை, திருப்பூர் மாவட்ட செயலாளர் சிவசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. ரோகிணி, சூலூர் ஒன்றிய செயலாளர் டி.ஆர்.ராஜசேகர், சுல்தான் பேட்டை ஒன்றிய செயலாளர் தாமோதரன், கோவை நாடாளுமன்ற வேட்பாளர் அப்பாதுரை, மாநில தொழிற்சங்க செயலாளர் சின்னசாமி, சி.டி.சி. கருணாகரன் உள்பட நிர்வாகிகள் பலர் உடன் சென்றிருந்தனர்.

முன்னதாக கள்ளப்பாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி-புவனேஸ்வரி தம்பதியின் பெண் குழந்தைக்கு அகல்யா என்று டி.டி.வி. தினகரன் பெயர் சூட்டினார். அவர் சூலூர் தொகுதியில் தனது பிரசாரத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு கார் மூலம் திருப்பரங்குன்றம் புறப்பட்டு சென்றார்.

Next Story