புழலில் இரும்புக்கடையில் பயங்கர தீ விபத்து; ரூ.15 லட்சம் பொருட்கள் நாசம்


புழலில் இரும்புக்கடையில் பயங்கர தீ விபத்து; ரூ.15 லட்சம் பொருட்கள் நாசம்
x
தினத்தந்தி 10 May 2019 3:45 AM IST (Updated: 9 May 2019 10:07 PM IST)
t-max-icont-min-icon

புழலில் உள்ள இரும்புக்கடையில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின.

செங்குன்றம்,

சென்னை புழல் அந்தோணியார் கோவில் தெருவில் வசித்து வருபவர் சம்பத்ராம் (வயது 49). ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் புழல் கேம்ப் பஸ் நிலையம் அருகே இரும்புக்கடை நடத்தி வருகிறார். இங்கு இரும்பு பொருட்களும், பெயிண்ட்களும், தண்ணீர் தொட்டிகள் உள்ளிட்ட பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி கடையை பூட்டிவிட்டு குடும்பத்தோடு சம்பத்ராம் ராஜஸ்தான் மாநிலம் சென்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் கடையில் இருந்து புகை வெளியேறியது. உடனே அங்கிருந்தவர்கள் செங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

செங்குன்றம், மாதவரம், அம்பத்தூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் கடை முழுவதும் தீ பரவிவிட்டது. இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்ததாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story