பெண்ணிடம் உல்லாசமாக இருக்கலாம் என கூறி வாலிபரிடம் நகை, பணம் பறித்த 3 பேர் கைது
ஆண்டிப்பட்டியில் பெண்ணிடம் உல்லாசமாக இருக்கலாம் என்று வாலிபரிடம் ஆசை வார்த்தை கூறி அவரிடம் இருந்து நகை, பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி,
கேரள மாநிலம் மூணாறு செண்டுவாரை எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவரது மகன் அனீஸ்குமார்(வயது25). இவர் கடந்த 3-ந்தேதி தனது நண்பர்களை பார்ப்பதற்காக ஆண்டிப்பட்டிக்கு வந்தார். அங்கு ஒரு ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் அனீஸ்குமாரிடம், அழகான பெண் இருப்பதாகவும், உல்லாசமாக இருக்கலாம் என்றும் ஆசை வார்த்தை கூறினர். அதனை நம்பி அவர்களுடன் அனீஸ்குமார் சென்றார்.
இதையடுத்து ஆண்டிப்பட்டி ஏத்தகோவில் சாலையில் ரெயில்வே கேட் பகுதியில் உள்ள புதர் மறைவிற்கு அழைத்து சென்ற 3 பேரும், கீழே கிடந்த பீர்பாட்டிலை உடைத்து அனீஸ்குமாரை மிரட்டினர். பின்னர் அவர்கள் அனீஸ்குமாரிடம் இருந்து 1½ பவுன் சங்கிலி, 5 கிராம் மோதிரம், செல்போன் மற்றும் ரூ.1,500 ஆகியவற்றை பறித்து விட்டு அங்கிருந்து அவரை மிரட்டி அனுப்பினர்.
இதையடுத்து அனீஸ்குமார் சொந்த ஊரான மூணாறுக்கு சென்று நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறினார். இதைத்தொடர்ந்து பெற்றோர் உதவியுடன் ஆண்டிப்பட்டிக்கு வந்த அனீஸ்குமார் நடந்த சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசாரிடம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அனீஸ்குமாரை மிரட்டி வழிப்பறி செய்தது ஆட்டோ டிரைவரான தேனி பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த கார்த்திக்(23), தேனி முல்லைநகரை சேர்ந்த மனோஆனந்த்(32), கார் டிரைவரான போடியை சேர்ந்த மாரிமுத்து(24) என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து ஆண்டிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story