ஊட்டியில் பலத்த மழை, வாகனங்கள் தண்ணீரில் சிக்கின


ஊட்டியில் பலத்த மழை, வாகனங்கள் தண்ணீரில் சிக்கின
x
தினத்தந்தி 9 May 2019 10:45 PM GMT (Updated: 9 May 2019 5:53 PM GMT)

ஊட்டியில் பெய்த பலத்த மழையால் வாகனங்கள் தண்ணீரில் சிக்கின.

ஊட்டி,

ஊட்டியில் கடந்த மாதம் முதல் மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் இருந்தே ஊட்டி நகரில் வெயில் அடித்தது. பின்னர் மதியத்துக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. மாலை 3 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடாமல் ஒரு மணி நேரம் பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு தண்ணீர் குளம்போல் தேங்கியது.

ஊட்டியில் காந்தல், ஹில்பங்க், பிங்கர்போஸ்ட், கோடப்பமந்து, நொண்டிமேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை, கூட்ஷெட் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் பாய்ந்தோடியது. ஊட்டி லோயர் பஜார் தலைகுந்தா பஸ் நிறுத்தம் பகுதியில் மழைநீரோடு சாக்கடை கழிவுநீரும் வழிந்தோடியதால், அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் துர்நாற்றம் தாங்க முடியாமல் அவதி அடைந்தனர்.

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் சில கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மழை காரணமாக கோடப்பமந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஊட்டி ஏரியையொட்டி உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அமைக்கப்பட்ட இரும்பு தடுப்புகளில் குப்பைகள் அடைத்ததாலும், மழையில் அடித்து வரப்பட்ட மண் படிந்ததாலும் படகு இல்ல சாலையை தண்ணீர் சூழ்ந்தது.

இதனால் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்குள் தண்ணீர் புகுந்தது.

ரெயில்வே மேம்பாலத்தின் கீழ்பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. அதன் காரணமாக காந்தலில் இருந்து ஊட்டிக்கு வந்த 2 அரசு பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டதோடு, சுற்றுலா வாகனங்களும் அணிவகுத்து நின்றன. இதற்கிடையே கர்நாடகா மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த சொகுசு கார் தண்ணீரில் சிக்கியது. இதனால் காரில் இருந்தவர்கள் கீழே இறங்க முடியாமல் தவித்தனர். மேலும் திருச்சியில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்திருந்தவர்கள் வேனில் கடக்க முயன்ற போது, தண்ணீர் அதிகமாக இருந்ததால் அதுவும் தண்ணீரில் சிக்கியது.

அந்த வேனில் 20-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இருந்தனர். அதனை தொடர்ந்து சரக்கு வாகனம் கொண்டு வரப்பட்டு தண்ணீரில் சிக்கிய வேனை கயிறு கட்டி மீட்கும் முயற்சி நடந்தது.

இதில் 2 முறை கயிறு அறுந்தது. தொடர் முயற்சியால் தண்ணீரில் இருந்து சரக்கு வாகனம் மூலம் பின்னோக்கி இழுத்து வேன் மீட்கப்பட்டது. சொகுசு காரை மீட்க முடியவில்லை. தண்ணீர் வடிந்த பின்னர் அரசு பஸ்கள் மற்றும் மற்ற வாகனங்கள் சென்றன. மழை காரணமாக ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி படகு சவாரி நிறுத்தப்பட்டது. மழை விட்ட பின்னர் மீண்டும் படகு சவாரி நடைபெற்றது.

Next Story