ஊட்டி நகரில், பகல் நேரங்களில் தாறுமாறாக இயக்கப்படும் லாரிகள்
ஊட்டி நகரில் பகல் நேரங்களில் தாறுமாறாக லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோடை சீசன் களை கட்டி உள்ளது. இந்த சீசனை அனுபவிக்க வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த வாகனங்கள் அல்லது வாடகை வாகனங்களில் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். சுற்றுலா நகரமான ஊட்டிக்கு வரும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கோடை சீசனையொட்டி போக்குவரத்து பாதிப்பை தவிர்ப்பதற்காக மேட்டுப்பாளையம்-குன்னூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலை ஒழி வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டது.
இதுகுறித்த அறிவிப்பு பலகைகள் சேரிங்கிராஸ் சந்திப்பில் வைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வார விடுமுறை நாட்களாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊட்டிக்கு அதிகளவில் வாகனங்கள் வருகின்றன.
புதியதாக வரும் வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் இயக்குவதாலும், சிலர் ஒரு வழிப்பாதையில் தவறி வாகனங்களை ஓட்டுவதாலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
ஊட்டி நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, வெளிமாவட்ட போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிக்காக வரவழைக்கப்பட்டு உள்ளனர். இருந்தாலும் ஊட்டியில் சேரிங்கிராஸ், எட்டின்ஸ் சாலை, கமர்சியல் சாலை உள்ளிட்ட சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டும், கோடை சீசனை முன்னிட்டும் ஊட்டி நகரில் பகல் நேரங்களில் லாரிகளை இயக்க கட்டுப்பாடுகளை நீலகிரி மாவட்ட காவல்துறையால் விதிக்கப்பட்டது.
அதன்படி, காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும் லாரிகள் இயக்க அனுமதி இல்லை. இதனை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், ஊட்டியில் பகல் நேரங்களில் லாரிகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. சேரிங்கிராஸ், எட்டின்ஸ் சாலை, புளுமவுண்டன் சாலை, காபிஹவுஸ், பிங்கர்போஸ்ட், நொண்டிமேடு போன்ற பகுதிகளில் லாரிகள் தாறுமாறாக இயங்குகிறது.
முன்னால் செல்லும் வாகனங்களை முந்தி செல்வதற்காக, அதிக சத்தத்துடன் கூடிய ஒலி எழுப்பியபடி லாரி டிரைவர்கள் வேகமாக செல்கின்றனர். இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அச்சத்தில் வழிவிட வேண்டிய நிலை காணப்படுகிறது.
இந்த சம்பவத்தால் ஊட்டியை சுற்றி பார்க்க வரும் பெண்கள், முதியவர்கள் எரிச்சலுக்கு உள்ளாகுகிறார்கள். மற்ற வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். மேலும் சேரிங்கிராஸ் பகுதியில் வளைவில் திரும்ப முடியாமல் லாரி நிற்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பகலில் லாரிகள் அனுமதியின்றி இயக்கப்படுவதை போலீசார் கண்டுகொள்வது இல்லை.
இதனால் ஊட்டி நகரில் போக்குவரத்து பாதிப்பு தொடர் கதையாகி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, ஊட்டி நகரில் அனுமதி இல்லாத நேரங்களில் தாறுமாறாக இயங்கும் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story