நெல்லை டவுனில் பயங்கரம்: கணவரை கொன்ற மனைவி கைது பரபரப்பு தகவல்கள்

நெல்லை டவுனில் கணவரை கயிற்றால் கழுத்தை இறுக்கிக்கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை,
நெல்லை டவுனில் கணவரை கயிற்றால் கழுத்தை இறுக்கிக்கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளி
நெல்லை டவுன் பாட்டப்பத்து வீரவாஞ்சிநாதன் தெருவை சேர்ந்த செண்பகம் மகன் ராதாகிருஷ்ணன் (வயது 44) கூலி தொழிலாளி. இவரது மனைவி காந்திமதி (40). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
காந்திமதி வீட்டில் தையல் எந்திரம் வைத்து, சாக்குப்பைகளை மொத்தமாக வாங்கி வந்து தைத்து கொடுக்கும் வேலை செய்து வந்தார். ராதாகிருஷ்ணன் தினமும் மனைவியை உறவுக்கு அழைத்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். அத்துடன் அவர் முறையற்ற உறவுக்கு மனைவியை கட்டாயப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், பெண் குழந்தைகள் இருப்பதால் அடிக்கடி உறவு கொள்ள காந்திமதி மறுத்து வந்தார்.
கழுத்தை இறுக்கிக்கொலை
நேற்று முன்தினம் இரவு குழந்தைகள் தூங்கி விட்டனர். அப்போது ராதாகிருஷ்ணன் மனைவியை முறையற்ற உறவுக்கு அழைத்தார். இதற்கு மறுத்த காந்திமதி, கணவருடன் சண்டையிட்டார். ஆனால், ராதாகிருஷ்ணன் கட்டாயப்படுத்தியதால் ஆத்திரமடைந்த காந்திமதி, அவரை கண்டித்தார். இருந்தபோதும், அதை ஏற்காமல் தொல்லை கொடுத்ததால் காந்திமதி, ராதாகிருஷ்ணனை அடித்து கீழே தள்ளினார்.
பின்னர் அருகில் கிடந்த கயிற்றால் அவரது கழுத்தை இறுக்கியுள்ளார். இதில் ராதாகிருஷ்ணன் சிறிது நேரத்தில் இறந்து போனார். அவரது உடலை வீட்டின் ஒரு ஓரத்தில் போட்டுவிட்டு காந்திமதி விடியும் வரை காத்திருந்தார்.
கிராம நிர்வாக அதிகாரியிடம் சரண்
நேற்று காலையில் கிராம நிர்வாக அலுவலர் மஞ்சுளாவிடம் சென்று, நடந்த விவரங்களை கூறி அவர் சரணடைந்தார். கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த தகவலின்பேரில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) புகழேந்தி, சப்-இன்ஸ்பெக்டர் விமலன் ஆகியோர் சம்பவ வீட்டுக்கு சென்று ராதாகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சிறையில் அடைப்பு
இந்த பயங்கர கொலை தொடர்பாக நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து காந்திமதியை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மேற்கண்ட பரபரப்பு தகவல்கள் வெளியானது. பின்னர் காந்திமதியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கொக்கிரகுளத்தில் உள்ள பெண்கள் சிறையில் அடைத்தனர்.
தந்தை கொலை செய்யப்பட்ட நிலையில் தாயும் கைதாகி சிறைக்கு சென்று விட்டதால், அவர்களது 3 குழந்தைகளும் செய்வதறியாது கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. கணவரை கயிற்றால் கழுத்தை இறுக்கி மனைவி கொலை செய்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story






