தேர்தல் முடிவுக்கு பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் கரூரில், முத்தரசன் பேட்டி


தேர்தல் முடிவுக்கு பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் கரூரில், முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 10 May 2019 4:15 AM IST (Updated: 10 May 2019 2:23 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் முடிவுக்கு பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என கரூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

கரூர், 

கரூரில் நேற்று காலை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வாக்காளர்கள் தங்களது கடைமையை நிறைவேற்றி விட்டனர். அதை உறுதி செய்ய வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. அரசியல் சட்டப்படி தான் தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இது யாருக்கும் கட்டுப்பட தேவையில்லை. தர்மபுரியில் 8, திருவள்ளூரில் ஒன்றும், கடலூரில் ஒன்றும் என மொத்தம் 10 வாக்குச்சாவடிகளில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்த கோரிக்கை வந்திருப்பதாக தமிழக தேர்தல் அதிகாரி கூறினார். இப்போது 46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்திருப்பதாக கூறுகிறார்.

10 வாக்குச்சாவடிகள் தவிர மற்ற வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடத்த கோரிக்கை வைத்தது யார்? பொன்பரப்பியில் மறுதேர்தல் நடத்த கோரிக்கை வைத்தோம். அதை நிராகரித்து விட்டனர். தேர்தல் ஆணையத்தின் இந்த செயல் வியப்பாக உள்ளது.

மதுரையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்குள், பெண் தாசில்தார் 3 மணி நேரம் இருந்து ஆவணங்களை நகல் எடுத்துள்ளார். அவர் தன்னிச்சையாக செயல்பட்டிருக்க முடியாது. உயர் அதிகாரியின் உத்தரவில் தான் நடந்திருக்க வாய்ப்புள்ளது. அந்த அதிகாரி யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதேபோல் தேனிக்கு 50 வாக்குப்பதிவு எந்திரங்களை ரகசியமாக அனுப்பி வைக்க காரணம் என்ன?.

தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் தேர்தல் ஆணையத்தின் செயலால் எங்கள் வெற்றிக்கு பாதகம் ஏற்பட்டு விடுமோ என்ற ஐயப்பாடு உள்ளது.

தேர்தல் ஆணையத்தை பற்றி புகார் கூறினால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முந்திரிக்கொட்டையாக முந்திக் கொண்டு தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்படுவதாக கூறுவது ஏன் என தெரியவில்லை. மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 5 பேர் இறந்த சம்பவம் ஆட்சி நிர்வாகத்தின் அவல நிலையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவ வேண்டும். இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் அரசு தடுக்க வேண்டும். தேர்தல் முடிவுக்கு பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். ஆட்சியை தக்க வைக்க 3 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் எடுத்த நடவடிக்கையை நீதிமன்றம் தடுத்தது சிறப்பானது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story