பொள்ளாச்சி அருகே பண்ணை வீட்டில் மது விருந்தில் இளைஞர்களை மயக்கிய மாயத்தோற்ற இசை வந்தது எப்படி? அதிர்ச்சி தகவல்

பொள்ளாச்சி அருகே பண்ணை வீட்டில் நடந்த மதுவிருந்தில் இளைஞர்களை மயக்கிய மாயத்தோற்ற இசை (சைக்கேடேலிக் ராக்) வந்தது எப்படி? என்று அதிர்ச்சி தகவல் கிடைத்து உள்ளது.
கோவை,
பொள்ளாச்சியில், பெண்களுக்கு நடந்த சம்பவத்தை மறப்பதற்கு முன்பு, பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே சேத்துமடையில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் இளைஞர்களுக்கு மதுவிருந்து நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விருந்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. இது தவிர இசையில் கலந்த வசீகர போதையும் இளைஞர்களின் உணர்வுகளை தூண்டி விட்டு அடிமையாக்க முயற்சி செய்தது. இந்த விருந்தில் பங்கேற்க தமிழகம் மற்றும் கேரள பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து விட்டு வந்தது தெரியவந்தது.
போதையின் உச்சிக்கு சென்ற இளைஞர்களுக்கு ‘டிஸ்க் ஜாக்கி’ என்று அழைக்கப்படும் டி.ஜே. பார்ட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவர்கள் வித்தியாசமான இசையை கேட்டபடி நடனமும் ஆடிக்கொண்டு இருந்தனர்.
அப்போதுதான் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையிலான போலீசார் அந்த பண்ணை வீட்டிற்குள் அதிரடியாக சென்று சோதனை செய்தனர். அதில், ரஷ்யாவை சேர்ந்த போதை பொருட்களும் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அந்த நாட்டை சேர்ந்த இல்லியன் ஜோரீன், டெல்லியை சேர்ந்தவர்கள் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கோவை மற்றும் சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த மதுவிருந்தில் கலந்து கொண்ட 174 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டன. அவர்கள் போலீஸ் நிலைய ஜாமீனிலேயே விடுவிக்கப்பட்டனர்.
இந்த விருந்தில் போடப்பட்ட இசை குறித்து போலீசார் ஆய்வு செய்தபோது அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதாவது அந்த இசைக்கு சைக்கேடேலிக் ராக் என்று பெயர். இதற்கு தமிழில் மாயத்தோற்ற இசை என்று பொருள். பெரிய பெரிய விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களில் நடத்தப்படும் டிஸ்க் ஜாக்கி பார்ட்டியும், தமிழகத்துக்கு இதுவரை வந்திராத மாயத்தோற்ற இசையும் கோவை மாவட்டத்துக்கு வந்தது எப்படி? என்பது குறித்து அதிரடி விசாரணையில் போலீசார் இறங்கினார்கள். இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
இன்றைய தொழில்நுட்பம் நிறைந்த காலக்கட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து விட்டது. இதில் போதை பொருட்களுக்கு அடிமையானவர்கள், இணையதளம் மூலம் ஆழமான போதையை கொடுக்கும் வஸ்துக்கள் குறித்து அறிந்து அதை பயன்படுத்தும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.
ஏதாவது ஒரு நாட்டில் வித்தியாசமான போதை வஸ்துக்களை பயன்படுத்துகிறார்கள் என்றால், அந்த நாட்டை சேர்ந்தவர்களிடம் முகநூல் (பேஸ்புக்) மூலம் அறிமுகமாகி, அவர்களிடம் பேசி அந்த போதை பொருட்களை வாங்கி விடுகிறார்கள். இப்படி ஒரு வித்தியாசமான வசீகர போதைதான் சேத்துமடை பண்ணை வீட்டில் நடந்த மதுவிருந்தில் சைக்கேடேலிக் ராக் என்ற இசையுடன் கலந்து அரங்கேற்றப்பட்டு இருக்கிறது. அந்த இசையுடன் திரையில் ஒருவித ஆபாச ஓவியங்களும் வண்ணமயமாய் விரியத் தொடங்கும்.
பொதுவாக அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து போன்ற பணக்கார நாடுகளில் உள்ள விடுதிகளில் இதுபோன்ற இசையை கேட்டபடி போதையின் உச்சிக்கு செல்வார்கள். மாயத்தோற்ற இசையை நாம் சாதாரணமாக கேட்க முடியாது. அப்படி கேட்டால் தலையே வெடித்துவிடும் அளவுக்கு இருக்கும். ஆனால் போதையின் உச்சிக்கு சென்றவர்கள், இந்த இசையை கேட்கும்போது அவர்களுக்கு மேலும் கூடுதலாக போதையை கொடுக்கும்.
அதாவது இந்த இசை போதையில் இருக்கும் நபருக்கு மாயைகளை மனதில் உருவாக்கி, இல்லாதவைகளை இருக்கிறதை போலவும், காற்றில் மிதப்பது போலவும், உயிரற்ற பொருட்களும் பேசுவது போலவும் உணர வைக்கும். இந்த இசையை பல வண்ண விளக்குகளுடன் வித்தியாசமான ஓவியங்களுடன் காட்சிப்படுத்தும்போது 10 மடங்கு போதை அதிகரிக்கும். இதனால் அங்கு இருப்பவர்கள் போதையின் உச்சிக்கே சென்று விடுவார்கள்.
இந்த இசையை அனுபவிக்க உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் தனி இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இங்கு செல்பவர்கள் போதையில் இருந்து மீண்டதாக சரித்திரம் இல்லை. அவர்கள் தங்களின் வாழ்க்கையை தொலைத்ததுதான் மிச்சம். இதனால்தான் தமிழகத்தில் இதுபோன்ற மது நிகழ்ச்சி நடத்த அனுமதி இல்லை.
ஆனால் ரஷ்யாவை சேர்ந்தவர் தனது நண்பர்கள் உதவியுடன் சேத்துமடை பகுதியை தேர்வு செய்து, மதுவிருந்தை ஒழுங்கு செய்து உள்ளார். அவர்தான் இந்த இசையையும் அங்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார். இதற்கு டெல்லியை சேர்ந்த 3 பேரும் துணையாக இருந்துள்ளனர். இது மிகவும் ஆபத்தான விஷயம் ஆகும். இதை ஆரம்பத்திலேயே தடுத்தால் மட்டுமே இங்கு சென்றவர்களை போதை பழக்கவழக்கத்தில் இருந்து மீட்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இந்த டிஸ்க் ஜாக்கி பார்ட்டி மற்றும் மாயத்தோற்ற இசை குறித்து மனநல மருத்துவர் ஒருவர் கூறியதாவது:-
சமீபகாலமாக புதுபுது போதை கலாசாரங்கள் இளைஞர்களிடம் தொற்றிக்கொண்டு உள்ளது. நமது நாட்டில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, கோவா, அந்தமான் நிகோபார் தீவுகள், கேரளா போன்ற பகுதிகளில்தான் இந்த இசை நடனங்களுடன் போதை விருந்து அரங்கேறி வந்தது. தற்போது அது கோவைக்கும் வந்து விட்டது. பெரும்பாலும் இந்த விருந்தில் பெண்கள் சேர்ந்து நடனம் ஆடுவார்கள். ஆனால் இங்கு நடந்த விருந்தில் பெண்கள் யாரும் இல்லை.
மது அருந்தும் ஒருவருக்கு போதை அதிகமாகும்போது யாரிடமாவது தகராறு செய்வார் அல்லது தூங்கி விடுவார். ஆனால் போதையின் உச்சத்துக்கு செல்லும் நபர் தூங்காமல் போதையின் ஆழத்தை அனுபவித்துக்கொண்டே இருப்பார். இதுபோன்ற நபர்களால்தான் ஆபத்து அதிகம். 2 ஆண்டுகளுக்கு மேல் ஒரு நபர் இதுபோன்ற போதை அனுபவத்தை பயன்படுத்தினால் மூளை நரம்புகள் பாதிக்கப்படும். பிறகு மரணம் உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இந்த மது விருந்து நிகழ்ச்சியை ரஷ்யாவை சேர்ந்தவர் ஒருங்கிணைத்து உள்ளதால், அவர் கோவாவில் இருந்து சமூக வலைதளங்கள் மூலம் அதிகளவில் கேரள இளைஞர்களை ஒருங்கிணைத்து சேத்துமடை பகுதிக்கு அழைத்து வந்து உள்ளார். இந்த நபர் சுற்றுலா விசாவில்தான் இந்தியா வந்து உள்ளார். இந்த விவகாரத்தில் கோவை மாவட்ட காவல்துறை சென்னையில் உள்ள ரஷ்ய வெளியுறவுத்துறைக்கு தகவலும் தெரிவித்து உள்ளது.
இந்த நபர் ரஷ்யாவில் உள்ள போதை பொருட்களை கொண்டு வந்து உள்ளதால் அவருக்கு அங்கு உள்ள போதை கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. எனவே மிகவும் ரகசிய முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
செல்போன், இணையதளம் வருவதற்கு முன்பு இளைஞர்கள் இதுபோன்று சீரழியவில்லை. தற்போது அனைத்து இளைஞர்களும் இணைய தளம் பயன்படுத்தி வருவதால், எளிதாக தவறான பாதைக்கு செல்ல வாய்ப்பு அதிகரித்து உள்ளது. எனவே பெற்றோர் தங்களின் குழந்தை களை கவனிக்கவில்லை என்றால் அவர்களின் வாழ்க்கை திசைமாறி சென்றுவிடும். அதை தவிர்த்துவிட்டு சந்தோஷமாக, ஆரோக்கியத்து டன் வாழ வேண்டும் என்றால் இணையதளத்தில் நல்லதையே மட்டும் தேர்வு செய்ய வேண்டும் என்பதே அனைவரின் அறிவுரையாக இருக் கிறது.
Related Tags :
Next Story






