கோபி அருகே மின்சாரம் தாக்கி மரம் ஏறும் தொழிலாளி சாவு


கோபி அருகே மின்சாரம் தாக்கி மரம் ஏறும் தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 11 May 2019 4:30 AM IST (Updated: 11 May 2019 4:00 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே மின்சாரம் தாக்கி மரம் ஏறும் தொழிலாளி இறந்தார்.

டி.என்.பாளையம்,

கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டியை அடுத்த பகவதி நகரை சேர்ந்தவர் சென்னியப்பன். இவருடைய மகன் சரவணன் (வயது 27). மரம் ஏறும் தொழிலாளி. இவரும், இவருடைய சித்தப்பா பூங்காவனமும் நேற்று காலை 8.30 மணி அளவில் அந்த பகுதியில் உள்ள மெட்ராஸ்காரர் என்பவருடைய தோட்டத்துக்கு மரம் ஏற சென்றார்கள்.

அங்கு சரவணன் மரத்தில் ஏறி தென்னை மட்டைகளை வெட்டி கீழே போட்டுக்கொண்டு இருந்தார். மரத்தின் அருகேயே மின்கம்பியும் சென்றது.

இந்தநிலையில் ஒரு தென்னை மட்டையை வெட்டி கீழே போடும்போது அதன் ஒரு பகுதி மின்கம்பியிலும், மற்றொரு பகுதி சரவணனின் காலிலும் பட்டது.

இதனால் சரவணனை மின்சாரம் தாக்கியதால், அவர் மரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

உடனே அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சரவணனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருடைய உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி துடித்தது பார்க்க பரிதாபமாக இருந்தது.

Next Story