மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மின்தடையால் 5 பேர் இறந்த விவகாரம்: தமிழக அரசுக்கு முதற்கட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது - டீன் வனிதா பேட்டி


மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மின்தடையால் 5 பேர் இறந்த விவகாரம்: தமிழக அரசுக்கு முதற்கட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது - டீன் வனிதா பேட்டி
x

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மின்தடையால் 5 பேர் இறந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து முதற்கட்ட விசாரணை அறிக்கை, தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக டீன் வனிதா கூறினார்.

மதுரை,

மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே அரசு ஆஸ்பத்திரியின் விரிவாக்க கட்டிடத்தில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கும், தலைக்காயங்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த 7-ந்தேதி அரசு ஆஸ்பத்திரியில் கனமழையால் ஏற்பட்ட மின்தடையால் அங்கு வென்டிலேட்டர் கருவியில் வைக்கப்பட்டிருந்த மல்லிகா(வயது 59), ரவிச்சந்திரன்(52), பழனியம்மாள்(60), ஆறுமுகம்(54), செல்லத்தாய்(55) ஆகியோர் ஆக்சிஜன் கிடைக்காமல் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், இதுகுறித்து, மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் வனிதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு பல இடங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதன் காரணமாக டாக்டர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்கின்றனர். கனமழை பெய்த சமயத்தில் மின்தடை ஏற்பட்டது உண்மை தான். ஆனால், அப்போது, வென்டிலேட்டர் பழுது ஏற்பட்டு 5 பேர் இறந்ததாக கூறப்படுவது தவறானது. அதில் மல்லிகா, பழனியம்மாள், ரவிசந்திரன் ஆகிய 3 பேர் மட்டுமே மின்சாரம் இல்லாத நேரத்தில் இறந்தனர். மற்ற 2 பேரும் மின்சாரம் இருந்த சமயத்தில் தான் இறந்தார்கள். இது அடிப்படையிலேயே தவறானதாக இருக்கிறது.

மின்சாரம் இல்லாத சமயத்தில் இறந்த 3 பேருக்கும் மூளையில் பலத்த காயம் இருந்தது. மின்சாரம் இருந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அந்த நேரத்தில் அவர்கள் இறந்திருப்பார்கள். அவர்களின் இறப்பு இயற்கை தான். அதற்கும், மின்தடைக்கும் சம்பந்தம் இல்லை. அன்றைய தினத்தில் என்ன நடந்தது என்பது குறித்து தமிழக அரசுக்கு முதற்கட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. முழுமையான அறிக்கை இன்னும் சில தினங்களில் அனுப்பப்படும்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 2,500 உயிர் காக்கும் கருவிகள் உள்ளன. இதில் 164 வென்டிலேட்டர்களும் அடங்கும். இங்குள்ள அனைத்தும் வென்டிலேட்டர்களும் 2 மணி நேரம் பேட்டரியில் இயங்கும் தன்மை கொண்டது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்தில் கூட அந்த அனைத்து வென்டிலேட்டர்களும் சரிபார்க்கப்பட்டது.

ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் கூட அதனை உடனடியாக சரி செய்வதற்கு தேவையான மின் ஊழியர்களும் தயார் நிலையில் தான் இருக்கின்றனர். ஆஸ்பத்திரியின் முக்கிய பிரிவுகளில் மின்தடை ஏற்பட்டால் இயங்கும் வகையில் 17 யூ.பி.எஸ். கருவிகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story