கூடலூர் மார்த்தோமா நகரில், சந்தன மரம் வெட்டி கடத்தல் - வனத்துறையினர் விசாரணை


கூடலூர் மார்த்தோமா நகரில், சந்தன மரம் வெட்டி கடத்தல் - வனத்துறையினர் விசாரணை
x
தினத்தந்தி 11 May 2019 4:00 AM IST (Updated: 11 May 2019 5:25 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் மார்த்தோமா நகரில் சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டது. இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடலூர்,

கூடலூர் வனப்பகுதியில் விலை உயர்ந்த சந்தனம், ரோஸ்வுட், அகில், ஓமம், தேக்கு உள்ளிட்ட மரங்கள் அதிகளவில் உள்ளன. இதனை பாதுகாக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபடுகின்றனர். இருப்பினும் சந்தனம், ரோஸ்வுட் உள்ளிட்ட மரங்கள் கள்ளத்தனமாக வெட்டி கடத்தப்படுகிறது. இதனை தடுக்க வேண்டிய வனத்துறையினரும் வனக்கொள்ளையர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது இல்லை என்று பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்து உள்ளது.

இந்த நிலையில் கூடலூர் மார்த்தோமா நகரில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் உள்விளையாட்டு அரங்கம், பொதுமக்களின் வீடுகள் இருக்கின்றன. இதுதவிர அதனருகில் சிறிய வனப்பகுதியும் உள்ளது. இங்கு சந்தன மரங்கள் அதிகளவு வளர்ந்து உள்ளன. நேற்று காலையில் அரங்குக்கு விளையாட வந்த வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளும் நபர்கள் மார்த்தோமா நகருக்கு வந்தனர்.

அப்போது அரங்கின் அருகே உள்ள வனப்பகுதியில் நின்றிருந்த சந்தன மரத்தை மர்ம ஆசாமிகள் வெட்டி கடத்தியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மரத்தின் சில துண்டுகள் மட்டும் சிதறி கிடந்தது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் வனச்சரகர் ராமகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டனர். பின்னர் வனத்துறையினர் கூறியதாவது:-

யாரோ மர்ம ஆசாமிகள் சந்தன மரத்தை வெட்டி உள்ளனர். ஆனால் மரம் போதிய வளர்ச்சி அடைவதற்குள் வெட்டி உள்ளதால், அதில் சந்தனம் இல்லை. இருப்பினும் சில பாகங்களை எடுத்து அவர்கள் சென்றுள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
1 More update

Next Story