நண்பர்களுடன் குளிக்க சென்றபோது பரிதாபம்: பி.ஏ.பி. வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி, மகனை காப்பாற்றிய தொழிலாளி சாவு


நண்பர்களுடன் குளிக்க சென்றபோது பரிதாபம்: பி.ஏ.பி. வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி, மகனை காப்பாற்றிய தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 12 May 2019 4:45 AM IST (Updated: 12 May 2019 12:02 AM IST)
t-max-icont-min-icon

பொங்கலூர் அருகே பி.ஏ.பி வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள். மற்றொரு சம்பவத்தில் தண்ணீரில் அடித்து சென்ற மகனை காப்பாற்றிய தொழிலாளி இறந்தார்.

பொங்கலூர்,

திருப்பூர் மாவட்டம் காங்கேயம், நல்லிபாளையத்தை சேர்ந்த சண்முகம். இவரது மகன் பூபதி (வயது 18). முத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று தனது உறவினரான பொங்கலூர் அருகே உள்ள தொங்குட்டிபாளையத்தை சேர்ந்த சேமான் என்பவரது மகன் தமிழரசு (18) வீட்டிற்கு சென்றார்.

பின்னர் பூபதி, தமிழரசு உள்பட 7 பேர் ஒன்றாக சேர்ந்து திருப்பூர்–தாராபுரம் சாலை ஆண்டிபாளையம் அருகே செல்லும் பி.ஏ.பி. வாய்க்காலில் குளிக்க முடிவு செய்து அங்கு வந்தனர். அங்கு பூபதி மற்றும் தமிழரசு ஆகிய இருவருக்கும் நீச்சல் தெரியாததால் படியில் அமர்ந்து குளித்துக்கொண்டிருந்தனர். மற்ற அனைவரும் வாய்க்காலில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக படியில் குளித்துக்கொண்டிருந்த பூபதி மற்றும் தமிழரசு இருவரும் வழுக்கி வாய்க்காலின் உள்ளே தண்ணீருக்குள் விழுந்துவிட்டனர்.

பி.ஏ.பி.வாய்க்கால் அந்த பகுதியில் 15 அடி அகலமும், 10 அடி ஆழமும் கொண்டதாக உள்ளது. தற்போது 8 அடி உயரத்திற்கு தண்ணீர் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இதனால் தண்ணீரில் இருந்து அவர்களால் வெளியே வரமுடியவில்லை. இதனால் மூழ்கிய இருவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். அப்போது ‘‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’’ என்று கூச்சல் போட்டனர். உடனே அருகில் குளித்துக்கொண்டிருந்த நண்பர்கள் அவர்கள் இருவரையும் காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. அதற்குள் தண்ணீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட தூரத்திற்கு தண்ணீர் அடித்து சென்றது. இதுகுறித்து அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் வாய்க்கால் பகுதி முழுவதும் தேடினர்.

அப்போது தமிழரசு இறந்த நிலையில் அவரது உடலை கிருஷ்ணாபுரம் என்ற இடத்தில் கண்டுபிடித்து மீட்டனர். பூபதியின் உயிரற்ற உடலை கிருஷ்ணாபுரத்தில் இருந்து சற்று தொலைவில் கண்டியன்கோவில் என்ற இடத்தில் இருந்து மீட்டனர். இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதுபோல் நேற்று முன்தினம் தாராபுரம், கொழுமங்குளியை அடுத்த அண்ணாநகரை சேர்ந்த கூலித்தொழிலாளியான ராஜேந்திரன்(34) என்பவர் தனது மகன் பிருத்விராஜ்(10) உடன் ஆண்டிபாளையத்தில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென பிருத்விராஜ் தவறி தண்ணீரின் உள்ளே விழுந்து விட்டான்.

உடனே தனது மகனை காப்பாற்றும் நோக்கில் ராஜேந்திரன் வாய்க்காலில் குதித்து மகனை பிடித்து கரையின் ஓரத்தில் தள்ளினார். இதனால் கரையின் சுவரை பிடித்து பிருத்விராஜ் தப்பித்து வெளியே வந்தான்.

ஆனால் ராஜேந்திரனை தண்ணீர் அடித்துச்சென்று விட்டது. அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாய்க்கால் பகுதியில் தேடியதில் கிருஷ்ணாபுரம் என்ற இடத்தில் இருந்து ராஜேந்திரன் இறந்த நிலையில் அவரது உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவங்கள் குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story