துக்கம் விசாரிக்க வந்தபோது பரிதாபம் மரத்தில் வேன் மோதி மூதாட்டி பலி; குழந்தைகள் உள்பட 7 பேர் படுகாயம்

திருப்பூரில் இருந்து துக்கம் விசாரிக்க நெல்லைக்கு வந்தபோது வேன் மரத்தில் மோதி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தைகள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
நெல்லை மாவட்டம் சிவகிரியில் மாரிமுத்து என்பவர் இறந்து விட்டார். இவரது இறப்பை அறிந்து உறவினர்கள் துக்கம் விசாரிக்க திருப்பூரில் இருந்து வேன் மூலம் நெல்லைக்கு வந்துள்ளனர். வேனை சரவணகுமார் (வயது42) என்பவர் ஓட்டி வந்தார். வேனில் சரவணகுமாரின் சகோதரர் சந்திரசேகர்(38), அவரது மனைவி சீதாலட்சுமி (33) குழந்தைகள் ரஞ்சித்(10),அமிர்தா(7), கோதை நாச்சியார்(45), பாண்டீஸ்வரி (28), சேது அம்மாள் (65) ஆகியோர் இருந்தனர்.
வேன் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவில் தனியார் கல்லூரி அருகே வந்த போது நிலைதடுமாறி தேசிய நெடுஞ்சாலை சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் வேனின் முன்பகுதி நொறுங்கியது. வேனில் பயணம் செய்த அனைவரும் படுகாயம் அடைந்தனர்.சேது அம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து கிருஷ்ணன் கோவில் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த 7 பேரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சேது அம்மாள் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தால் ஸ்ரீவில்லிபுத்தூர்– ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் கிருஷ்ணன் கோவில் போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர். விபத்து தொடர்பாக கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேனை ஓட்டி வந்த சரவணகுமாரும்,சந்திரசேகரும் திருப்பூரில் டையிங் நிறுவனம் நடத்திவருவதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.






