அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்: ஸ்டாலின் பச்சை பொய் பேசி வாக்காளர்களை ஏமாற்ற பார்க்கிறார் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்றும், ஸ்டாலின் பச்சை பொய் பேசி வாக்காளர்களை ஏமாற்ற பார்க்கிறார் எனவும் திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் பிரசாரத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மதுரை,
மதுரை திருப்பரங்குன்றம் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து, நாகமலை புதுக்கோட்டை, வடபழஞ்சி, தென்பழஞ்சி, தனக்கன் குளம், திருநகர் ஆகிய இடங்களில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். செல்லும் இடங்களில் எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரசாரத்தில் அவர் பேசியதாவது:–
நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டியை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டும். எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்க வேண்டும். அ.தி.மு.க. மக்கள் இயக்கம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்டி காத்த இயக்கம். அந்த இயக்கத்தை மக்கள் அரியணையில் ஏற்றி வைத்துள்ளார்கள். இந்த கட்சியும், ஆட்சியும் மக்களுடையது.
நான் சாதாரண தொண்டனாக இருந்து உங்கள் முன் பேசிக் கொண்டு இருக்கிறேன். இங்கு ஸ்டாலின் வருவார். அவர் தலைவர். நான் தொண்டன். இங்குள்ள அனைவரையும் நான் முதல்–அமைச்சராக பார்க்கிறேன். முதல்–அமைச்சராக இருந்து நீங்கள் இடும் கட்டளையை, பணியை நிறைவேற்றுவது தான் எனது கடமை. அந்த நிலையில் தான் நான் பணியாற்றிக் கொண்டு இருக்கிறேன். மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
எத்தனையோ முதல்–அமைச்சர்கள் இருந்தாலும் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தவர்கள் தான் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும். ஆனால் அதே நேரத்தில் வீட்டுக்காக உழைத்து முதல்–அமைச்சராக இருந்து மறைந்தவர் யார் என்பது உங்களுக்கு தெரியும்.
கருணாநிதி தலைவராக இருந்தார். அவரது மகன் ஸ்டாலின் இப்போது தலைவராக இருக்கிறார். கருணாநிதி நாட்டு மக்களுக்காக வாழ்ந்த வரலாறு கிடையாது. வீட்டு மக்களுக்காக கட்சி வைத்திருந்தார். தி.மு.க. கட்சி கிடையாது. அது ஒரு கம்பெனி. இங்கு எம்.எல்.ஏ.வாக இருந்த போஸ் மறைந்ததால் இங்கு தேர்தலை சந்திக்கிறோம். இது இடைத்தேர்தல். இங்கு அ.தி.மு.க. கூட்டணி சார்பில் முனியாண்டி போட்டியிடுகிறார். இங்கு ஆளுங்கட்சி வேட்பாளர் முனியாண்டி வெற்றி பெற்றால் இந்த தொகுதி மக்களின் பிரச்சினைகள் தீரும். அதே நேரத்தில் எதிர்கட்சி வெற்றி பெற்றால் ஒரு பலனும் கிடைக்க போவதில்லை.
இப்போது சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர்கள் 88 பேர் இருக்கிறார்கள். அவர்கள் மக்களின் பிரச்சினைகளுக்காக என்னை நேரில் சந்தித்து இதுவரை மனு கொடுத்து இருக்கிறார்களா? இல்லவே இல்லை. எனவே தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டால் உங்களது பிரச்சினை தீராது. ஆனால் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றால் இந்த பகுதி மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் தேவை என்று எங்களிடம் கூறுவார். அதனை இந்த அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். ஆகவே ஆளுங்கட்சிக்கு வெற்றியை நீங்கள் தர வேண்டும்.
இந்த இடைத்தேர்தலில் ஸ்டாலின் நிறைய வாக்குறுதிகளை தருகிறார். எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு அவரால் எப்படி இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்? ஆளுங்கட்சி தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். எனவே என்னென்ன திட்டங்களை நிறைவேற்ற முடியுமா, அதனை வாக்குறுதிகளாக தருகிறோம். ஆனால் ஸ்டாலின் எதையும் நிறைவேற்ற முடியாது என்று தெரிந்து கொண்டே, தனது இஷ்டத்திற்கு வாக்குறுதிகளை கூறி வருகிறார்.
22 சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்று நன்மை செய்வேன் என்று ஸ்டாலின் கூறுகிறார். நான் சொல்கிறேன் ஏற்கனவே நடந்து முடிந்த 18 சட்டசபை தொகுதிகளிலும், நடைபெற உள்ள 4 சட்டசபை தொகுதிகளிலும் என 22 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தான் அமோக வெற்றி பெறும். இந்த அரசு பெரும்பான்மையுடன் இருக்கும். அ.தி.மு.க. அரசு தொடரும்.
கால் கடுக்க இங்கு நிற்கும் மக்களின் பிரச்சினைகளை பற்றி நான் பேசுகிறேன். ஆனால் ஸ்டாலின், தான் செல்லும் இடங்களில் எல்லாம் தனது தந்தை கருணாநிதிக்கு எடப்பாடி பழனிசாமி ஆறடி நிலம் கொடுக்க வில்லை என்று பச்சை பொய் பேசுகிறார். அடப்பாவி, நான் 2 ஏக்கர் நிலம் கொடுத்தேன். அது ரூ.300 கோடி மதிப்பு இருக்கும். ஆறடி நிலம் கேட்டவருக்கு ரூ.300 கோடியில் நிலத்தை இந்த அரசு கொடுத்தது. அதுவும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எதிரில், காந்தி மண்டபம் அருகில் இடம் கொடுத்தோம். ஆனால் இந்த நிலம் வேண்டாம் என்றுதான் ஸ்டாலின் கோர்ட்டுக்கு சென்றார்.
ஏற்கனவே மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு இடம் கொடுத்தது தவறு என்று ஸ்டாலின் பினாமிகள் தான் கோர்ட்டுக்கு சென்றனர். அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டு இருந்தது. அதனை மீறி, நாங்கள் இடம் கொடுத்தால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு வந்து விடும். இது குறித்து ஸ்டாலினிடம் தெளிவாக சொல்லி விட்டோம். எனவே தான் கருணாநிதிக்கு அங்கு இடம் கொடுக்க வில்லை.
இருந்தாலும் ஸ்டாலின் அவசரமாக கோர்ட்டுக்கு சென்றார். அப்போது ஜெயலலிதா உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ததது தவறு என்று வழக்கு போட்ட 3 பேரும் தங்களது வழக்கை வாபஸ் பெறுகின்றனர். உடனே நீதிமன்றத்தில் மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய அனுமதி பெறுகின்றனர். நாங்கள் நினைத்தால் மேல்முறையீடு சென்று இருப்போம். ஆனால் செல்லவில்லையே?.
காமராஜர் மறைந்தவுடன், அவரது உடலை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கருணாநிதியிடம் இடம் கேட்டனர். ஆனால் அதற்கு கருணாநிதி, முதல்–அமைச்சராக இருக்கும் போது மறைந்தவர்களுக்கு தான் மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்று கூறி மறுத்துவிட்டார். ஆனால் கருணாநிதி மரணம் அடையும் போது, வெறும் எம்.எல்.ஏ.வாக தானே இருந்தார். எனவே காமராஜருக்கு ஒரு நியாயம். கருணாநிதிக்கு ஒரு நியாயமா?
காமராஜர் இந்த நாட்டு மக்களுக்காக எவ்வளவு பெரிய திட்டங்களை எல்லாம் கொண்டு வந்தார். பிரதமர் ஆகும் வாய்ப்பு கிடைத்தும் மறுத்து விட்டார். மக்களுக்காக சிறை சென்றார். ஆனால் காமராஜரை விட, கருணாநிதி என்ன மிகப்பெரிய தலைவரா? ஆனால் காமராஜருக்கு மெரினாவில் இடம் கொடுக்க மறுத்த கருணாநிதிக்காக, ஸ்டாலின் மட்டும் மெரினாவில் இடம் கேட்பது சரியா?
தந்தை கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்க வில்லை என்றதும் வருத்தப்பட்டதாக மகன் ஸ்டாலின் கூறுகிறார். அதே போல் தானே காமராஜருக்கு இடம் தர வில்லை என்று அவரது தொண்டர்களுக்கு எவ்வளவு வருத்தம் இருந்திருக்கும்.
அதே போல் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் முதல்–அமைச்சராக இருந்தார். அவரது மறைவுக்கு பின், அவரது உடலை அடக்கம் செய்ய மெரினாவில் ஆறடி நிலம் கொடுங்கள் என்று அ.தி.மு.க. சார்பில் கேட்டார்கள். ஆனால் இதே கருணாநிதி, ராமாவரம் தோட்டத்தில் இடம் இருக்கிறது, அங்கு அடக்கம் செய்யுங்கள் என்று தனது கைப்பட எழுதினார்.
ஸ்டாலின் உண்மையை மறைத்து மக்களிடம் அனுதாபம் பெற பச்சை பொய் பேசுகிறார். இது ஒரு தலைவரின் இறப்பு பற்றியது. எனவே ஸ்டாலின் உண்மையை பேச வேண்டும். பொய் பேசி எதையும் சாதிக்க முடியாது. உண்மை தான் நிலைத்து இருக்கும். தர்மமும், நீதியும் தான் வெல்லும். அது எங்கள் பக்கம் உள்ளது. எனவே தான் மக்களிடம் இதனை எடுத்துச் சொல்கிறோம். பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதையே ஸ்டாலின் வழக்கமாக வைத்து இருக்கிறார். பச்சை பொய் பேசி வாக்காளர்களை ஏமாற்ற பார்க்கிறார்.
திருப்பரங்குன்றம் தொகுதி வடபழஞ்சியில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ரூ.20 கோடி செலவில் உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் ரெயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் காமராஜர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவ–மாணவிகள் எளிதாக சாலையைக் கடக்கும் வகையில் ரூ.50 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டித்தரப்படும். மேலும், ரூ.90 லட்சம் மதிப்பில் சாலைப் பணிகள் நிறைவேற்றித்தரப்பட்டுள்ளது.
தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த ஆஸ்பத்திரி இங்கு அமையும் போது, இந்தப்பகுதியில் உள்ள ஏழை–எளிய மக்களுக்கு, நல்ல தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்கும். வடபழஞ்சி தொழிற்பூங்காவை விரிவுபடுத்தி நேரடியாக 40 ஆயிரம் இளைஞர்களுக்கும், மறைமுகமாக 25 ஆயிரம் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வடிவேல்கரை, வாணங்குளம், ஆரியான்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகள், கண்மாய்கள் ரூ.2 கோடி மதிப்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டுள்ளது. இந்தப்பகுதியில் விமான நிலையம் போன்று அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய பஸ்போர்ட் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காமராஜர் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
நான் ஒரு விவசாயி. மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் கடுமையாக வேளாண் பணி மேற்கொண்டிருக்கிறேன். இது மண்வெட்டி பிடித்த கை. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது வெயில் என்று கூட பாராமல் பொதுமக்களை சந்தித்து நான் வாக்கு கேட்டுள்ளேன். எனக்கு பொதுமக்களின் கஷ்ட நஷ்டங்கள் நன்கு தெரியும்.
ஆனால் மு.க.ஸ்டாலினுக்கு மக்களின் கஷ்டங்கள் தெரியாது. அவர் இங்கு வந்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போது, ‘நான் கவர்ச்சியாக இருக்கிறேன். தற்போது தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் கொஞ்சம் கருத்து விட்டேன்’, என கூறினார். எம்.ஜி.ஆர். கூட இது போன்ற கருத்தை தெரிவிக்கவில்லை.
கேபிள் டி.வி. கட்டணத்தை குறைப்பதாக மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். கருணாநிதி குடும்பத்துக்கு மட்டும் 40 டி.வி. சேனல் உள்ளது. இதில் சன் டி.வி குழுமத்தில் உள்ள சேனல்களைப் பார்க்க ரூ.56 கட்டணம் ஆகிறது. கேபிள் டி.வி. கட்டணத்தை குறைப்பதாக சொல்லும் மு.க.ஸ்டாலின், இந்த சேனல்களின் கட்டணத்தை தள்ளுபடி செய்யலாமே. ஆனால் இது பற்றி அவர் வாய்திறக்க மாட்டார். எனினும் தேர்தல் முடிந்த பிறகு கேபிள் டி.வி. கட்டணத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.