திடீர் உடல்நலக்குறைவு சிகிச்சை பலனின்றி நீதிமன்ற ஊழியர் பரிதாப சாவு தனியார் ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகை


திடீர் உடல்நலக்குறைவு சிகிச்சை பலனின்றி நீதிமன்ற ஊழியர் பரிதாப சாவு தனியார் ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 12 May 2019 4:30 AM IST (Updated: 12 May 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

புதுவை தனியார் ஆஸ்பத்திரியில் நீதிமன்ற ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என கூறி உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி,

புதுச்சேரி வைத்திக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகலிங்கம் (வயது54). புதுவை நீதிமன்றத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அமுதா.இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகிவிட்டது.

இந்தநிலையில் நாகலிங்கம் நேற்று மாலை வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென உடல் நிலை சரியில்லாமல் போனது. உடனே அவரை உறவினர்கள் மீட்டு காந்தி வீதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் நாகலிங்கம் திடீரென சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவருடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்தவுடன் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், நாகலிங்கத்திற்கு டாக்டர்கள் முறையான சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டினார்கள். அதைத்தொடர்ந்து அவர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்தவுடன் பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். பின்னர் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story