குடிநீர் கேட்டு 2-வது நாளாக காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்


குடிநீர் கேட்டு 2-வது நாளாக காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 11 May 2019 11:00 PM GMT (Updated: 11 May 2019 8:12 PM GMT)

திண்டுக்கல்லில், குடிநீர் கேட்டு 2-வது நாளாக காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் செய்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் ஒய்.எம்.ஆர். பட்டியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்வதால் போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். அதற்கு உரிய நடவடிக்கை இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் திண்டுக்கல்-சிலுவத்தூர் சாலையில் குடிநீர் கேட்டு, காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த திண்டுக்கல் வடக்கு போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று காலையில் ஒய்.எம்.ஆர்.பட்டி பொதுமக்கள் திண்டுக்கல் தலைமை தபால் நிலைய அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர் அப்போது பொதுமக்களில் சிலர் கூறியதாவது:- எங்கள் பகுதியில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வரவில்லை. இதனால் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். நாங்கள் பல கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீர் பிடித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு உடனடியாக தண்ணீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story