ராய்ச்சூர் என்ஜினீயரிங் மாணவி மர்மசாவு வழக்கில் அதிரடி திருப்பம் தற்கொலை செய்தததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்


ராய்ச்சூர் என்ஜினீயரிங் மாணவி மர்மசாவு வழக்கில் அதிரடி திருப்பம் தற்கொலை செய்தததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்
x
தினத்தந்தி 12 May 2019 4:00 AM IST (Updated: 12 May 2019 2:34 AM IST)
t-max-icont-min-icon

ராய்ச்சூரில் என்ஜினீயரிங் மாணவி மர்மசாவு வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு, 

ராய்ச்சூரில் என்ஜினீயரிங் மாணவி மர்மசாவு வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

மாணவி மர்மசாவு

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் டவுன் பகுதியை சேர்ந்த 20 வயது நிரம்பிய இளம்பெண் தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார். கடந்த 13-ந் தேதி மாயமான அவர் 16-ந் தேதி அனுமப்பா கோவில் அருகே உள்ள மரத்தில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவருடைய உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மாணவி தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். ஆனால், மாணவியின் பெற்றோர் அதை மறுத்தனர். அத்துடன் மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டு உள்ளார் என்று மாணவியின் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். இதுகுறித்து நேதாஜி நகர் போலீசார் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

சி.ஐ.டி. விசாரணை

இதற்கிடையே, மர்மச்சாவு அடைந்த மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இதன் தொடர்ச்சியாக சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் சுதர்சன் யாதவ் என்பவரை கைது செய்தனர். பின்னர் வழக்கு விசாரணை சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் என்ஜினீயரிங் மாணவி மர்மசாவு வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அதில் மாணவி தற்கொலை செய்தது உறுதியாகி உள்ளது.

தற்கொலை என தகவல்

மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில், ‘மாணவி மீது தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை. அவர் கற்பழிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இல்லை. தூக்கில் தொங்கியதால் கழுத்தில் ரத்து உறைவு ஏற்பட்டதோடு, காயமும் உள்ளது. சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பிறகு தான் உடல் மீட்கப்பட்டதால் வெயில் காரணமாக உடல் கருப்பாகவும், அழுகிய நிலையிலும் உள்ளது. உடலில் தீ வைக்கப்படவில்லை’ என்பன போன்ற அம்சங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.

காரணம் என்ன?

மாணவி தற்கொலை செய்தது தெரியவந்துள்ள நிலையில், தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் சுதர்சன் யாதவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கைதான சுதர்சன் யாதவும், மாணவியும் நண்பர்களாக பழகினர். இந்த நிலையில் சுதர்சன் யாதவ், மாணவியை காதலித்துள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 13-ந் தேதியும் சுதர்சன் யாதவ் காதலிக்க வலியுறுத்தி அவரை தாக்கியுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் காதல் பிரச்சினை மாணவியின் தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று சி.ஐ.டி. போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதுதொடர்பாக சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
1 More update

Next Story