மாவட்ட செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு - மேலும் ஒருவர் கைது + "||" + Sub-Inspector Sick cut - one more arrested

சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு - மேலும் ஒருவர் கைது

சப்-இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு - மேலும் ஒருவர் கைது
திருத்துறைப்பூண்டி அருகே சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தலைக்காடு மேலத்தெருவை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவருடைய மகன் சுபாஷ்சந்திரபோஸ் (வயது22). இவர் தன் நண்பர்களான அதே ஊரை சேர்ந்த ராஜா மகன் இளமாறன் (23), ராமையன் மகன் வீரசேகரன் (25) மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பா.ஜனதா கட்சி முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் கணேசன் மகன் பிரகாஷ் என்பவரின் மோட்டார் சைக்கிளை மறித்து தகராறு செய்தார்.

மேலும் அங்கு வேனை ஓட்டி வந்த முள்ளூரை சேர்ந்த வெங்கடேசன்(48) என்பவரை மறித்து வேன் கண்ணாடியையும் உடைத்தனர். அப்போது அந்த வழியாக திருத்துறைப்பூண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மோட்டார் சைக்கிளில் வந்தார். இதைக்கண்ட அவர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தகராறில் ஈடுபட்ட சுபாஷ்சந்திரபோஸ் மற்றும் அவரது நண்பர்களை பிடிக்க முயன்றனர். இதில் சுபாஷ்சந்திரபோஸ் போலீஸ் பிடியில் சிக்கினார்.

அவரை மோட்டார் சைக்கிளில் உட்கார வைத்து போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் தலைக்காடு கடைத்தெரு அருகே சென்ற போது அங்கு வந்த பா.ஜனதா கட்சி முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் கணேசன் மற்றும் 5 பேர் மோட்டார் சைக்கிளை மறித்து சுபாஷ்சந்திரபோசை வெட்ட முயன்றனர். இதை தடுக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமாருக்கு கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதை பயன்படுத்தி சுபாஷ்சந்திரபோஸ் மற்றும் கணேசன் தரப்பினர் தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து சிவக்குமார் அளித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் பா.ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட பொதுசெயலாளர் கணேசன் உள்பட 3 பேரை கைது செய்தனர். இதேபோல வேன் உரிமையாளர் வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் சுபாஷ்சந்திரபோஸ், இளமாறன், வீரசேகரன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இளமாறன் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தநிலையில் சப்-இன்ஸ்பெக்டரை வெட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த தேசிங்குராஜபுரத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (38) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.