சேலம் ஜான்சன்பேட்டையில் பரபரப்பு: மயானத்திற்கு பூட்டுபோட முயன்ற பொதுமக்கள்


சேலம் ஜான்சன்பேட்டையில் பரபரப்பு: மயானத்திற்கு பூட்டுபோட முயன்ற பொதுமக்கள்
x
தினத்தந்தி 11 May 2019 11:10 PM GMT (Updated: 11 May 2019 11:10 PM GMT)

சேலம் ஜான்சன்பேட்டையில் உள்ள மயானத்திற்கு பூட்டு போட முயன்ற பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டு ஜான்சன்பேட்டையில் மயானம் உள்ளது. இங்கு மாநகர பகுதிகளில் உயிரிழப்பவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படுகிறது. பிணங்களை எரியூட்டும்போது கரும்புகை வெளியேறுகிறது. இந்த புகை வெளியேறும் கூண்டு பழுதடைந்த நிலையில் உள்ளது. இதை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் ஆத்திரமடைந்த நிலையில் காணப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மயானம் முன்பு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென மயானத்திற்கு பூட்டு போட முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து மயானத்தை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் கூறுகையில், மயானத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட குழாய்கள் மற்றும் எந்திரங்களை மாநகராட்சி சார்பில் முறையாக பராமரிக்கப்படவில்லை. இதையொட்டி உடலை எரிக்கும் போது, அதில் இருந்து வெளியேறும் புகை குடியிருப்பு பகுதிக்கு வருவதால் பாதிப்படைகிறோம். புகை மட்டுமல்லாமல் குழாயில் இருந்து வெளியேறும் சாம்பலும் குடியிருப்பில் உள்ள தண்ணீர், உடை ஆகியவற்றின் மீது படுகிறது.

இதனால் பல்வேறு தொற்று நோய்களும் ஏற்பட்டு குழந்தைகளும் பாதிக்கிறார்கள். எனவே பழுதடைந்த இந்த குழாயை சரி செய்திட வேண்டும். இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தோம். ஆனால் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதைக்கேட்ட அதிகாரிகள், பழுதடைந்த குழாய்க்கு பதிலாக புதிய குழாய் வரவழைக்கப்பட்டு இருப்பதாகவும், விரைவில் அதனை பொருத்தும் பணி தொடங்கும் என்றும் உறுதி அளித்தனர். எனவே போராட்டத்தை கைவிடுமாறு தெரிவித்தனர்.

இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story