அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க.வுக்கு டெபாசிட் கிடைக்காது பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க.வுக்கு டெபாசிட் கிடைக்காது பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 12 May 2019 11:15 PM GMT (Updated: 12 May 2019 6:45 PM GMT)

அரவக்குறிச்சியில் தி.மு.க.வுக்கு டெபாசிட் கிடைக்காது என பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

கரூர்,

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று புகளூர் நான்குரோடு, நொய்யல் குறுக்குச்சாலை ஆகிய இடங்களில் திறந்தவேனில் நின்றபடி பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் தான் மக்களுக்கு பல எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார். தமிழகத்தில் குடிசை பகுதிகளில் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு 2023-ம் ஆண்டுக்குள் நல்ல தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன்படி 16 லட்சம் வீடுகள் கட்ட கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் 6 லட்சம் வீடுகள் கட்டி முடித்து ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. வருகிற 2023-ம் ஆண்டிற்குள் ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும். பெண்களின் பாதுகாப்பிற்கும், முன்னேற்றத்திற்கும் எண்ணற்ற பல திட்டங்களை தந்தவர் ஜெயலலிதா.

ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். எந்த திட்டங்களையும் குறைக்கவில்லை. கூடுதலாக தான் கொடுக்கப்படுகிறது. பொங்கல் பரிசு பொருட்களுடன் ரூ.1,000 வழங்கப்பட்டது.

இதேபோல பருவமழை பெய்யாததால் வறுமையில் வாடும் விவசாயிகள், ஏழை, எளிய மக்கள் 60 லட்சம் பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. தொடங்கிய சில நாட்களில் பொறாமை காரணமாக தி.மு.க. கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இத்திட்டத்திற்கு தடை வாங்கியது. கோர்ட்டில் விலக்கு பெற்று தேர்தல் முடிந்ததும் 60 லட்சம் பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும்.

தமிழகத்தில் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. இந்த ஆட்சியில் எந்த குறையும் இல்லை. விவசாயத்தில் நெல் உற்பத்தியில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக இந்தியாவில் தமிழகம் முதலிடம் பிடித்து மத்திய அரசின் விருதுகளை பெற்றுள்ளது.

தொழில் வளர்ச்சிக்காக சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3 லட்சம் கோடிக்கு தொழில்கள் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க. திகழ்கிறது. தமிழகத்தில் எந்த பாகுபாடும் இல்லை.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது, அவர்கள் ஆட்சி காலத்தில் செய்த சாதனைகள், திட்டங்கள் குறித்து தான் வாக்குகள் கேட்க வேண்டும். ஆனால் அவர்கள் ஆட்சி காலத்தில் எந்த திட்டமும் செய்யாததால் அதனை கூறி, வாக்குகள் கேட்க முடியவில்லை.

வருகிற 23-ந்தேதிக்கு பிறகு இந்த ஆட்சி கவிழ்க்கப்படும் என்று ஒரே வார்த்தையை பேசி வருகிறார். மக்கள் நம் மீது (அ.தி.மு.க.) நம்பிக்கை வைத்துள்ளார்கள். இந்த தேர்தலோடு அ.தி.மு.க. காணாமல் போய்விடும் என மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. அ.தி.மு.க. ஒரு ஆலமரம். தொண்டர்கள் இந்த ஆலமரத்தை காத்துக்கொண்டிருக்கிறார்கள். புயல், சுனாமி, பூகம்பம் எது வந்தாலும் அ.தி.மு.க. அசையாது.

கருணாநிதியால் செய்ய முடியாததை மு.க.ஸ்டாலினால் எந்த காலத்திலும் செய்ய முடியாது.

எந்த காலத்திலும் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக முடியாது. எதிர் கட்சியாக தி.மு.க. இருந்தாலும் இன்னும் வன்முறையை கைவிடாமல் உள்ளது. அ.தி.மு.க. கட்டுப்பாடான இயக்கம்.

இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார்? என்பது உங்களுக்கு தெரியும். செந்தில் பாலாஜி எத்தனை கட்சிகள் தான் மாறுவார். தி.மு.க.வில் இருந்து குறுகிய காலத்தில் அவர் வெளியேறுவார். அங்கிருந்து அடித்து வெளியேற்றிவிடுவார்கள். அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்து வருபவர்கள், தனித்து கட்சி தொடங்கியவர்கள் யாரும் நன்றாக இருந்ததாக சரித்திரம் இல்லை.

அரவக்குறிச்சி தொகுதியில் ஏற்கனவே செந்தில்நாதன் அ.தி.மு.க.சார்பில் போட்டியிட்ட போது செந்தில்பாலாஜி சதி செய்து தோற்கடித்தார். இந்த தேர்தலில் நல்ல தீர்ப்பை மக்கள் வழங்க வேண்டும். துரோகம் செய்த ஒருவர் வசமாக மாட்டியுள்ளார். அவருக்கு முடிவு கட்ட வேண்டும். இந்த தொகுதியில் தி.மு.க.வுக்கு டெபாசிட் கூட கிடைக்காது. 4 தொகுதி நடைபெறுகிற இடைத்தேர்தலில் அரவக்குறிச்சியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நீங்கள் தேடி தர வேண்டும்.

கதவணை

கரூரில் அரசு மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. அரவக்குறிச்சி, பரமத்தி ஒன்றியங்களில் 50 ஊராட்சிகளில் ரூ.220 கோடியில் காவிரி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ரூ.490 கோடியில் காவிரியில் கதவணை கட்டும் பணி தேர்தலுக்கு பின் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். அப்போது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உடன் இருந்தார்.

இதேபோல பவித்திரம், தும்பிவாடி, தென்னிலை ஆகிய இடங்களில் ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம் செய்தார். புகளூர் நான்கு ரோட்டில் ஓ.பன்னீர் செல்வம் பேசி கொண்டிருந்தபோது, பள்ளிவாசலில் தொழுகைக்காக பாங்கு சத்தம் எழுப்பப்பட்டதால் சில நிமிடங்கள் அவர் பேச்சை நிறுத்தி விட்டு தொடர்ந்தார்.

Next Story