குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் வேடப்பட்டி ஆசிரியர் காலனி பொன்வேநகர் 1, 2–வது தெருக்களில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 5 அல்லது 6 நாட்களுக்கு ஒருமுறை அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த சில வாரங்களாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஏ.வெள்ளோடு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில வாரங்களாக மேல் எங்கள் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. அத்துடன் ஆசிரியர் காலனி பகுதியில் பதிக்கப்பட்ட குழாய்களில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் வெளியேறுகிறது. அதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனாலேயே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த கூட யாரும் வரவில்லை. நாளைக்குள் (அதாவது இன்று) எங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்கப்படவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். அதன் பின்னரும் குடிநீர் வழங்கப்படாவிட்டால் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவிப்போம் என தெரிவித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.