ராயக்கோட்டை அருகே பூசாரி குடும்பத்தினரை கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் கொள்ளை 6 பேருக்கு போலீசார் வலைவீச்சு


ராயக்கோட்டை அருகே பூசாரி குடும்பத்தினரை கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் கொள்ளை 6 பேருக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 13 May 2019 10:30 PM GMT (Updated: 13 May 2019 5:16 PM GMT)

ராயக்கோட்டை அருகே பூசாரி குடும்பத்தினரை கத்தியை காட்டி மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ராயக்கோட்டை,

இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள நாகமங்கலம் ஊராட்சி யு.புரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 42). இவர் ராயக்கோட்டை அருகே உள்ள பெருமாள் கோவில் ஒன்றில் பூசாரியாக இருந்து வருகிறார். இவர் ராயக்கோட்டை தக்காளி மண்டி அருகில் ஓசூர் சாலையில் உள்ள ஒரு வீட்டில் மனைவி சுமதி மற்றும் 4 வயது மகளுடன் குடியிருந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 9.30 மணி அளவில், 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் லாரி பழுதாகி உள்ளதாகவும், அதனால் தாங்கள் அங்கு வந்ததாகவும் கூறி குடிக்க தண்ணீர் கேட்டனர். இதையடுத்து கிருஷ்ணமூர்த்தியின் மனைவி சுமதி தண்ணீர் எடுப்பதற்காக வீட்டுக்குள் சென்றார். அப்போது தண்ணீர் கேட்ட 2 பேர் உள்பட மொத்தம் 6 பேர் வீட்டிற்குள் “திபு, திபு”வென்று நுழைந்தனர்.

அவர்கள் கையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து கதவை சாத்திக்கொண்டு வீட்டில் இருந்த பூசாரி கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி சுமதி மற்றும் குழந்தை ஆகியோரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை, பணத்தை கேட்டனர். தொடர்ந்து வீட்டில் பீரோவில் வைத்திருந்த ரூ.80 ஆயிரம், 3½ பவுன் நகை ஆகியவற்றை அவர்கள் கொள்ளையடித்தனர். மேலும் கிருஷ்ணமூர்த்தி வைத்திருந்த செல்போனையும் அவர்கள் பறித்துக் கொண்டு வெளியே வந்தனர். பின்னர் கொள்ளையர்கள் வீட்டின் வெளிப்புறமாக கதவை பூட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இந்த நிலையில் வீட்டில் இருந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் குடும்பத்தினர் கூச்சலிட்டனர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்த கதவை திறந்து உள்ளே சென்றனர். இதைத் தொடர்ந்து கொள்ளை சம்பவம் குறித்து கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் தெரிவித்தார். இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து அவர் ராயக்கோட்டை போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் கொள்ளை சம்பவம் குறித்து கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவருடைய மனைவியிடம் விசாரணை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். இந்த கொள்ளை தொடர்பாக ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். ராயக்கோட்டை அருகே பூசாரி வீட்டில் கத்தியை காட்டி மிரட்டி 6 பேர் நகை, பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story