வேலூர் அருகே பணத்தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்தியவர் கைது
வேலூர் அருகே பணத்தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்தியவர் கைது செய்தனர்.
வேலூர்,
வேலூரை அடுத்த கம்மவான்பேட்டையை சேர்ந்தவர் முன்னாள் ராணுவவீரர் மாணிக்கம். இவருடைய மகன் மணிராஜா (வயது 32), தொழிலாளி. இவருக்கும், அதே பகுதி புதுத்தெருவை சேர்ந்த முஸ்தபா (31) என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் இருந்து வந்துள்ளது. மணிராஜாவிற்கு கொடுக்க வேண்டிய பணத்தை முஸ்தபா கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார். அதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 8–ந் தேதி இரவு மணிராஜா மீண்டும் முஸ்தபாவிடம் பணத்தை கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முஸ்தபா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிராஜாவின் வயிறு உள்பட உடலின் பல்வேறு இடங்களில் குத்திவிட்டு தப்பி சென்றார்.
இதில், படுகாயம் அடைந்த மணிராஜாவை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து முஸ்தபாவை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.